

கோப்புப் படம்
திமுக வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பு திருவண்ணாமலையில் இன்று (டிச.14) நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பு திருவண்ணாமலையில் இன்று நடைபெறவுள்ளது. திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.30 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலை இன்று நடைபெறவுள்ளது.
நமது கட்சியில் பாச உணர்வோட பழக வேண்டும் என்பதற்காகத்தான், உடன்பிறப்பே என்று உறவு கொண்டாடுகிறோம். எல்லோரையும் கொள்கை அளவில் வளர்த்து எடுக்க வேண்டும் என்று பாசறை பக்கம் தொடங்கி, சமீபத்தில் வள்ளூவர் கோட்டத்தில் நடந்த அறிவுத் திருவிழா வரை ஏராளமான முன்னெடுப்புகளை உதயநிதி செய்து வருகிறார்.
அதேபோல், களத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியலை என்னிடம் காண்பித்தார். அதை பார்த்தபோது 45 ஆண்டுகளுக்கு முன்னால் 1980-ல் நாங்கள் இளைஞரணி தொடங்கியபோது எப்படி பெருமையாக இருந்ததோ, அதைப்போல பெருமையாகவும், கர்வமாகவும் இருந்தது.
இளைஞர்களாக பொறுப்புக்கு வந்துள்ள நீங்கள் ‘திராவிடம்’ எனும் மக்களுக்கான மாபெரும் தத்துவத்தை பேசப் போகிறீர்கள். திமுக எனும் மாபெரும் இயக்கத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோகும் கடமை உங்களுக்கு வந்துள்ளது.
இந்தியாவிலேயே இன்றைக்கு தமிழகம் தனித்தன்மையோடு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நீங்கள் வரப்போகிறீர்கள் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது. சென்னையில் அறிவுத் திருவிழா நடந்தபோது, தலைநகரை தவிர்த்து மற்ற பகுதிகளிலும் நடந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.
உதயநிதி இந்த சந்திப்புக்கான அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, வடக்கு மண்டலத்தில் உள்ள 29 கட்சி மாவட்டங்கள், 91 சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து கிளை, வார்டு, பாக அளவில் நியமிக்கப்பட்டுள்ள 1.30 லட்சம் பேர் வருகிறார்கள் என்று கூறியபோது வார்டு, கிராம அளவில் இந்த அறிவுத் திருவிழா நடக்க போகிறது என்று மகிழ்ச்சியாக இருந்தது. எனவே, ஞாயிறு அன்று சந்திப்போம். இவ்வாறு அதில் பேசியுள்ளார்.