

தருமபுரி: தருமபுரி உட்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் சட்ட விரோதமாக கருவின் பாலினம் தெரிவிக்கும் விவகாரங்களை முழுவதுமாக தடுக்க ஸ்கேன் இயந்திரங்கள் கிடைக்கும் வழிகளை அடைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவிப்பதால் பெண் சிசுக்கள் பல கருவிலேயே அழிக்கப்படும் அவலம் நடைபெறுகிறது. இதையறிந்த அரசு கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவிப்பதை கடும் குற்றமாக அறிவித்ததுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனைகள் பெற்றுத் தருவதற்கான வழிவகைகளை சட்டத்தின் மூலம் ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பான தகவல் பலகைகள் ஸ்கேன் மையங்கள், ஸ்கேன் மையங்களுடன் கூடிய தனியார், அரசு மருத்துவ மனைகள் உள்ளிட்ட இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
கரு நிலையில் பல பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதால் பாலின சமத்துவமின்மை ஏற்பட்டு அது பல்வேறு சமூக சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, இதையெல்லாம் தடுக்கும் வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு விளம்பரங்களும் மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கருவின் பாலினம் கண்டறிவது, பெண் சிசுக்களை ரகசியமாக கருக்கலைப்பு செய்வது போன்ற விதிமீறல்கள் நடந்து வருகின்றன.
இந்த செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர். இருப்பினும், சில வாரங்கள் அல்லது மாதங்களிலேயே மீண்டும் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்கத் தொடங்கி விடுகின்றன. இதுபோல தருமபுரியில் 2 வாரங்களுக்கு முன்புகூட இவ்விவகாரம் தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இது ஒருபுறமிருக்க கருவின் பாலினம் கண்டறியும் ஸ்கேன் இயந்திரங்கள் சமூக விரோத கும்பல்களுக்கு கிடைக்கும் வழிகளை அடைப்பதில் அரசு முழு கவனம் செலுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத் துறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கருவின் பாலினம் கண்டறியும் ஸ்கேன் மையங்களில் பயன்படுத்துவதற்கான ஸ்கேன் இயந்திரங்களை வாங்கும்முன்பு அரசின் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஸ்கேன் இயந்திரங்களின் தொடர் பயன்பாடுகளை கண்காணிக்கும் பணி அந்தந்த மாவட்ட சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் மையங்கள் அனைத்துமே தங்களின் முந்தைய மாத பணி பதிவேடு விவரங்களை அடுத்த மாதம் 5-ம் தேதிக்குள் சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.
அதேபோல, பழுதான மற்றும் பயன்படுத்த முடியாத நிலையை எட்டிய ஸ்கேன் இயந்திரங்கள் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையங்களில் இருப்பு வைக்கப்படக் கூடாது. அவற்றை கையாள அரசு வகுத்திருக்கும் விதிகளை பின்பற்றி, ஸ்கேன் கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களிடமே அவை ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனாலும், இந்த விதிமுறைகள் 100 சதவீதம் செயலாக்கம் பெறுவதில்லை.
இந்த குறைபாடுகளைத் தான் சட்ட விரோதமாக ஸ்கேன் கும்பல் பயன்படுத்திக் கொள்கிறது. பழைய இயந்திரங்களை முறைகேடாக பெற்று அவற்றை சர்வீஸ் செய்து கருவின் பாலினம் தெரிவிக்கும் பணிக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இதைக் கடந்து வேறு வழிகளில் எளிதாக புதிய ஸ்கேன் இயந்திரங்களை அவர்களால் வாங்க முடியாது.
எனவே, பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் இயந்திரங்களை கையாள்வது தொடர்பாகவும், புதிய ஸ்கேன் இயந்திரங்களை விற்பனை செய்வது தொடர்பாகவும் கண்டிப்பான விதிமுறைகளை உருவாக்கி அவற்றை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தினால் சட்ட விரோதமாக கருவின் பாலினம் தெரிவிக்கும் கும்பலின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர முடியும். எனவே, கருவிலேயே பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதை தடுத்திட தமிழக அரசு இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.