

சென்னை: இலங்கையில் டிட்வா புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தாடைகள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
அண்மையில் வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தீவு தேசமான இலங்கையின் மோசமான இயற்கை பேரிடராக அமைந்தது. புயல் காரணமாக அந்த நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதில் பொருளாதார ரீதியாக மக்களும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் தமுமுக நிவாரண உதவி அளித்துள்ளது.
தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா எம்எல்ஏ-வின் வழிகாட்டுதலின்படி மமக தலைமை நிலையச் செயலாளர் வழ.ஜைனுல் ஆபிதீன், மாநில செயற்குழு உறுப்பினர் கொளத்தூர் காஜா, வட சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் வாஹித் ஆகியோர் நேரில் சென்று இந்த நிவாரண உதவியை வழங்கினர்.
தமுமுகவின் மனிதநேய பணிகள் குறித்து இலங்கை தூதரக துணை உயர் ஆணையர் கணேசநாதன் கீதிஸ்வரன் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
இலங்கை மக்களுக்கான நிவாரண செயல்பாடுகளுக்கு மேலும் உதவிகள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். பொதுமக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் பொருளாதார ரீதியாக இலங்கை சகோதரர்களுக்கு தூதரகம் வழியாக உதவுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இலங்கை தூதரக அலுவலர் சகோ.ரிபாஸ் இச்சந்திப்பை ஒருங்கிணைத்தார்.