Published : 17 Aug 2021 03:15 AM
Last Updated : 17 Aug 2021 03:15 AM

பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது முதியோர் உதவித் தொகையை உயர்த்தியது யார்?- சட்டப்பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்கள் காரசார விவாதம்

முதியோர் உதவித் தொகையை உயர்த்தியது யார் என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று தொடங்கியது.

விவாதத்தை தொடங்கிவைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது ரூ.1 லட்சம்கோடி கடன் இருந்தது. இருப்பினும் 1.83 கோடி குடும்ப அட்டைகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: நிதிச் சுமை குறித்து வெள்ளை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். 18 சதவீதமாக இருந்த மாநில உற்பத்திக் கடன் 2006-07-ல் திமுக ஆட்சியில் 15 சதவீதமாக குறைந்தது. பிறகு,அதிமுக ஆட்சியில் 12 சதவீதம் ஆனது. கடந்த 4 ஆண்டுகளில் இது 27 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் பேரவை விதி110-ன் கீழ் அறிவித்த பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

ஆர்.பி.உதயகுமார்: 2011-ல் ஜெயலலிதா கொண்டுவந்த இலவச அரிசி வழங்கும் திட்டம் இதுவரை அமலில் உள்ளது. முதியோர் உதவித் தொகையை ஜெயலலிதா ரூ.1,000 ஆக உயர்த்தினார். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இப்போது 52 லட்சம் மாணவர்கள் அதை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த பட்ஜெட்டில் புதுமையோ, புரட்சியோ இல்லை.

நிதியமைச்சர்: அதிமுக ஆட்சியில் 25 சதவீத பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டது. என் தொகுதியிலேயே 800 பேருக்கு நிறுத்தப்பட்டது.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: 2006 முதல் 2011 வரை 7 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: திமுக ஆட்சியைவிட எங்கள் ஆட்சியில் முதியோர் உதவித் தொகை 60 சதவீதம் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆட்சியர், வட்டாட்சியர் மூலம் ஆய்வு செய்து, தகுதிஇல்லாதவர்தான் நீக்கப்பட்டனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி: அதிமுக ஆட்சியில் ரூ.200 ஆக வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை கருணாநிதி ரூ.500 ஆக உயர்த்தினார். நாட்டுக்கே வழிகாட்டியாக ரேஷன் அரிசி கிலோஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது.

ஆர்.பி.உதயகுமார்: மக்களுக்கு பயன் அளிக்கும் என்றால், நிதிச் சுமை இருந்தாலும் அத்திட்டத்தை செயல்படுத்துவதில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உறுதியாக இருந்தனர்.

நிதியமைச்சர்: அந்த நேரத்தில் விற்பனை வரி உயர்த்தப்பட்டது. இப்போது ஜிஎஸ்டி இருப்பதால் அப்படி செய்ய முடியாது. எம்ஜிஆர்காலத்தில் செய்ததை சொல்லி, நீங்கள் செய்யாமல் விட்டதை மறைக்ககூடாது.

ஆர்.பி.உதயகுமார்: நிதிச் சுமையை காரணம் காட்டி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு பின்வாங்குகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x