

தஞ்சாவூர் மாவட்டத்தில் 12கல்வி நிறுவனங்களில் கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, அப்பகுதியில் பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் 58 மாணவிகள், ஒரு ஆசிரியை மற்றும் மாணவிகளின் பெற்றோரில் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது. அதன்பின்பு கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளி, ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி, பட்டுக்கோட்டை மற்றும் ஆலத்தூர் அரசுப் பள்ளிகள், தஞ்சாவூர் எம்.கே.எம்.சாலையில் உள்ள தனியார் பள்ளி, தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவற்றில் 7 ஆசிரியர்கள், 10 மாணவ - மாணவியருக்கு கரோனா ஏற்பட்டது.
இந்நிலையில், தஞ்சாவூர் எம்.கே.எம்.சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மேலும் 10 மாணவர்கள், 11 ஆசிரியர்கள், மகர்நோன்புச்சாவடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மேலும் 6 மாணவிகள், தஞ்சாவூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர், கும்பகோணம் தனியார் கல்லூரியில் 4 பேர், திருவையாறு அரசு கல்லூரி, பட்டுக்கோட்டை தனியார் பள்ளி, தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அரசுப் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு மாணவர் ஆகியோர் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சைமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவ், கூறியதாவது: இம்மாவட்டத்தில் இதுவரை 11 கல்வி நிறுவனங்களில் 121 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவற்றுக்கு 14 நாட்கள்விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே, தஞ்சாவூரில் சிகிச்சை பெற்றுவந்த அம்மாப்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகள் 58 பேரில் 51 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.