

சென்னை: “உலகப் பத்திரிகையே தமிழ்நாட்டை இன்றைக்கு ‘சூப்பர் ஸ்டார் ஸ்டேட்’ என்று சொல்கிறார்கள். இது போதாது. இன்னும் வளர்ச்சி வேண்டும். தமிழ்நாடு உங்களை நம்பித்தான் இருக்கிறது” என்று கல்லூரி மாணவர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.5) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக ‘உலகம் உங்கள் கையில்’ என்னும் மாபெரும் திட்டத்தில் 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில், முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியது: “நூறு அல்ல; ஆயிரம் அல்ல; 20 லட்சம் லேப்டாப்களை இளைய சமுதாயத்துக்கு வழங்கப் போகிறோம். அதன் முதல்கட்டமாகதான், இன்றைக்கு 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க தொடங்கி இருக்கிறோம். மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கின்ற இரண்டாவது நெருப்புதான் ஏஐ (AI). அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத்தான் இன்றைக்கு உங்கள் கைகளில் லேப்டாப் வழங்கியிருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரைக்கும், என்னுடைய எண்ணம் எல்லாம் என்ன தெரியுமா? நீங்கள் என்ன படிக்கிறீர்கள்? எத்தனை டிகிரி வாங்குகிறீர்கள்? என்ன வேலைகளில், எவ்வளவு பெரிய உயர்பொறுப்புகளில் இருக்கிறீர்கள்? சக்சஸ்ஃபுல்லாக, சொந்தமாக தொழில் நடத்துகிறீர்களா? உங்களால் எத்தனை பேருக்கு வேலை வழங்க முடிகிறது? உங்களுடைய வளர்ச்சியால் நீங்கள் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்வீர்கள்? சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு இருக்கின்ற இளைய சமுதாயம், மதிப்புமிக்க மனிதர்களாக, பெருமைமிக்க மனிதர்களாக, உயர்ந்து நிற்கவேண்டும். எல்லோரையும் வாழ வைக்கவேண்டும். இதுதான் என் எண்ணம்.
இன்றைக்கு உங்கள் கைகளுக்கு வந்திருக்கின்ற லேப்டாப், பரிசு பொருள் கிடையாது; உலகத்தை நீங்கள் ஆளுவதற்காக உங்கள் கைகளுக்கு வந்திருக்கக் கூடிய வாய்ப்பு. எங்களை பொறுத்தவரை, இது செலவுத் திட்டம் கிடையாது; எதிர்காலத் தலைமுறையின் கல்வியில் செய்யப்படும் முதலீடு. நீங்கள் படிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம். படித்து, உங்கள் எதிர்காலத்தை, வாழ்க்கைப் பாதையை, நல்ல பாதையாக தேர்ந்தெடுங்கள்.
3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் படிக்கின்ற டிகிரி மட்டுமே போதும் என்று நினைத்துவிடக் கூடாது. அனைத்துத் துறைகளிலும் தினமும் நிறைய வளர்ச்சிகள் வந்து கொண்டே இருக்கிறது. அதனால், டிகிரி படிப்பதோடு, அப்கிரேட் ஆகின்ற டெக்னாலஜிக்கு ஏற்றது போல, நீங்கள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கவேண்டும்!
இனிமேல், டெக்னாலஜியை படிப்பது என்பது ஆப்ஷன் கிடையாது; உங்கள் ஃபீல்டில் நீங்கள் நிலைத்து நிற்பதற்கு அவசியமாக இருக்கிறது. தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது. எல்லாவற்றிக்கும் மேலாக எல்லோருடைய கைகளுக்கும் அது வந்துவிட்டது. அதை முறையாக பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும்.
ஆனால் நான் ஒன்று சொல்கிறேன். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஒருபோதும் மனிதர்களை நாம் ரீ-பிளேஸ் செய்ய முடியாது. நம்முடைய வேலைகளை இன்னும் விரைவாக செய்வதற்கும், இன்னும் சிறப்பாக செய்வதற்கும் தான் ஏ.ஐ. துணை நிற்கும். ஸ்கில் அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் நிறைய உருவாகியிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்.
சென்ற ஜெனரேஷன் இளைஞர்கள், அறிவுக்காக, பல புத்தகங்களை தேடி அலையவேண்டும். ஆனால், இப்போது உங்களுக்கு தேவையான தகவல்களை, அறிவை, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இருந்த இடத்தில் இருந்து கொண்டும் அதை நீங்கள் பெறலாம். இந்த வளர்ச்சியை குறைசொல்லி முடங்கி போவது முட்டாள்களுடைய பாதை. இதை பயன்படுத்தி வாழ்க்கையின் உச்சத்தை தொட வேண்டியதுதான் உங்களுடைய வேலை.
இன்றைக்கு உங்கள் கைகளில் வந்திருக்கின்ற லேப்டாப்பை, சும்மா படம் பார்க்க, கேம்ஸ் விளையாட, பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்களா? இல்லை, உங்கள் கரியருக்கான லாஞ்ச் பேட் ஆக பயன்படுத்திக் கொள்ள போகிறீர்களா? இதுதான் நாங்கள் உங்கள் முன்னால் வைக்கக் கூடிய கேள்வி. எல்லாவற்றுக்குமே நல்லது, கெட்டது என்று இரண்டு சைடு இருக்கிறது. அதில் நீங்கள் எந்த சைடை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான் வெற்றி உங்கள் சைடு வரும்.
நான் சொல்வதெல்லாம், உங்கள் கரியர் எதுவாக இருந்தாலும், அதில் நீங்கள்தான் டாப் பொசிஷனில் இருக்கவேண்டும். வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில், நாம் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது, உங்களுடைய வெற்றியைச் சொல்லி, நீங்கள் மகிழ்ச்சி அடையவேண்டும்; அதில் தான் நான் பெருமைப்படவேண்டும்.
உலகத்தோடு போட்டி போடுங்கள். அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான கருவியைதான், இன்றைக்கு உங்கள் கைகளில் வழங்கியிருக்கிறோம்.
வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது. நான் எப்போதும் சொல்வதுதான் – நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். படியுங்கள், படியுங்கள், படியுங்கள். உங்களைப் பார்த்துக் கொள்வதற்கு நான் இருக்கிறேன்.
உங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. பணம் தேவைப்படுகின்ற உங்கள் அம்மாக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருகிறோம். படிப்பதற்கு தேவையென்றால் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய். மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய். பொங்கல் கொண்டாடுவதற்கு மூவாயிரம் ரூபாய் வழங்குகிறோம். பசியோடு காலையில் பள்ளிகளுக்கு வருகின்ற குழந்தைகளுக்கு காலை உணவு தருகிறோம். வேலை கிடைப்பதற்கு உலக அளவில் சென்று தொழிற்சாலைகளை கொண்டு வருகிறோம். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், பொருளாதாரத்தைப் பாருங்கள். டபுள் டிஜிட் வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறோம்.
அதனால்தான், இங்கே இருக்கக்கூடிய உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உலகப் பத்திரிகையே நம்முடைய தமிழ்நாட்டை இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ஸ்டேட் என்று சொல்கிறார்கள். இது எல்லாம் போதுமா. சொல்லுங்கள் போதுமா. கண்டிப்பாக போதாது. இன்னும் வளர்ச்சி வேண்டும். தமிழ்நாடு உங்களை நம்பித்தான் இருக்கிறது. உலகம் உங்கள் கையில் இருக்கிறது. ஜெயித்துவிட்டு வாருங்கள். நீங்களும் ஜெயித்து வாருங்கள். நாங்களும் ஜெயித்துவிட்டு வருகிறோம். எப்போதுமே உங்கள் கூடவே இருப்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.