சென்னை: முல்லை பெரியாறு அணைப் பகுதிகளில் நில அதிர்வு குறித்த பிரத்யேக ஆய்வை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து, நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கை:
முல்லை பெரியாறு அணை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நில அதிர்வுகள் குறித்துச் சிறப்பு ஆய்வு (Site-specific seismic study) மேற்கொள்ள ஹைதராபாத்தில் உள்ள அறிவியல், தொழில் ஆராய்ச்சிக் குழுமம் (சிஎஸ்ஐஆர்), தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆர்ஐ) ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இந்த ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.43 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டெண்டர் கோருதல் இன்றி, அரசு நிறுவனங்களுக்கு நேரடியாகப் பணி வழங்க தற்போது இந்த பிரிவு வழிவகை செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்க அபாயம் உள்ளதாக கேரளா தொடர்ந்து எழுப்பி வரும் குற்றச்சாட்டை, அறிவியல் பூர்வமாக முறியடிப்பதே இந்த ஆய்வின் நோக்கம். மத்திய அரசு நிறுவனங்களின் இந்த அறிக்கை தமிழகத்துக்கு வலுவான ஆதாரமாக அமையும். அணை புவியியல் ரீதியாக பாதுகாப்பாகவே உள்ளது என்பதை உறுதிப்படுத்த இந்த ஆய்வு உதவும்.
இதன்மூலம், தென் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணை மீதான தமிழகத்தின் உரிமை எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாக நிலைநிறுத்தப்படும் என்று துறை வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.