

சென்னை: ‘ஓய்வூதியம் மற்றும் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்துத் தமிழக நிதியமைச்சர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது’ என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.15,997.05 கோடியிலிருந்து ரூ.4,997.05 கோடியாகக் குறைத்து, ரூ.11,000 கோடியை அரசு நீக்கம் செய்துள்ளது.
மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.3,000 கோடியும், பள்ளிக் கல்வித் துறை நிதி ஒதுக்கீட்டில் ரூ.4,007 கோடியும் குறைக்கப்பட்டுள்ளது.
ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ் தலைமையிலான குழுவின் பரிந்துரையைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசு கடன் வாங்க அனுமதித்தால் மட்டுமே டிஏபிஎஸ் திட்டத்தை அமல்படுத்த முடியும் எனக் கூறி அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயல்கிறது.
மத்திய அரசைச் சாடி ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் வஞ்சிப்பது ஏற்புடையதல்ல. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு அரசாங்கத்தையும், வலுவான போராட்டங்களின் மூலம் மாற்றக்கூடிய வல்லமை ஊழியர்களுக்கு உண்டு என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, நிதியமைச்சரின் ஓய்வூதியம் தொடர்பான அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியைத் தாமதமின்றி உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
முதுகலை ஆசிரியர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளைச் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.