

தமிழகத்தில் நிலவி வரும் செயற்கையான பெட்ரோல் தட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தமிழக டிஜிபி-யிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உலகளாவிய சூழல்களால் ஏற்பட்டுள்ள அச்சம் காரண மாக, தமிழகத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த செயற்கை தேவையால் பொது மக்கள் பலரும் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பாத்திரங்களில் பெட்ரோல், டீசலை நிரப்ப வற்புறுத்துகின்றனர்.
பெட்ரோலிய சட்ட விதிகளின் படி, அங்கீகரிக்கப்படாத பாத்திரங்களில் எரிபொருளை விநியோகிப்பது சட்ட விரோதமானது. இது ஊழியர்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் மிகப்பெரிய தீ விபத்து அபாயத்தை ஏற்படுத்தும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கேன்களில் பெட்ரோல் வழங்க மறுக்கும் ஊழியர்களை, சில நபர்கள் தரக்குறைவாக பேசுவதும், உடல் ரீதியாகத் தாக்குவதும் அதிகரித்து வருகிறது . பல இடங்களில் இது சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இப் படி கேன்களில் எரிபொருளை வாங்கிச் செல்வது, கள்ளச்சந்தையில் எரிபொருளைப் பதுக்குவதற்கு வழிவகுக்கிறது.
கேன்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், நகர்ப்புறங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கூட்டத்தை முறைப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் குறைந்தது ஒரு காவலரையாவது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.