

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) வழங்கிய, விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலத்துக்கான விருதைப் பெற்றுக் கொண்ட தமிழக விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா. உடன் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி.
சென்னை: விளையாட்டு துறையை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்கும் மாநிலமாக அங்கீகரித்து தமிழகத்துக்கு சிஐஐ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் ‘சிஐஐ விளையாட்டு வர்த்தக விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதை, தமிழக அரசின் விளையாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உடனிருந்தார். இந்நிகழ்ச்சியில் அதுல்ய மிஸ்ரா பேசியது: இந்த அங்கீகாரத்தை வழங்கிய இந்தியத் தொழில் கூட்டமைப்புக்கும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் நன்றி.
சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரு முக்கிய கருவியாக விளையாட்டைக் கருதும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.
உலகத்தரத்தில் போட்டிகள்: அதேபோல், மாநிலத்தில் இளைஞர்களின் அடையாளமாய் திகழும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். அவரது தலைமையின் கீழ், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்படுகின்றன.
இன்றைக்கு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை, ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டி போன்ற உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படுகின்றன. இந்த மாற்றங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டிக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் பேசினார்.