

சென்னை: லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் விஜய் இன்று சென்னை திரும்பினார். முதல்வரின் இந்த பயணத்தில் ரூ.15,300 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தவெக ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1.03 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 1.21 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் கடந்த 10-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு இங்கிலாந்துக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமியைச் சந்தித்து, இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணியில் தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, தமிழகத்தில் உலகத் தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கடந்த செப்.3-ம் தேதி அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக, லண்டனில் உள்ள புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ மைதானத்துக்கு அவர் சென்றார். அங்கு சர்வதேச பந்தயங்களை நடத்துவதற்கான ரேஸ் கட்டுப்பாட்டு அறைகள், தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அமைப்புகளை ஆய்வு செய்தார். நடிகர் அஜித்குமார் பங்கேற்ற லீ மான்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அஜித்குமாருடன் ரேஸ் காரிலும் பயணித்து மகிழ்ந்தார்.
தமிழகத்தில் ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ள 14-ம் தேதி முதல்வர் விஜய் முன்னிலையில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. குறிப்பாக சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் ரூ.11,000 கோடியில் உற்பத்தி, தளவாட வசதிகளை நிறுவுகிறது. இதன்மூலம் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இது சர்வதேச வாகன உற்பத்தியில் தமிழகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும்.
இதுதவிர, ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் ரூ.3,000 கோடியில் தனது ஆலையை அமைக்க விருப்பக் கடிதம் அளித்துள்ளது. எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் ரூ.1,000 கோடியில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திறன் மையத்தை சென்னை மவுன்ட் - பூந்தமல்லி சாலை பகுதியில் அமைக்க உள்ளது. ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம், பிரிட்டனின் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
அசோக் லேலண்ட் நிர்வாகத் தலைவர் தீரஜ் இந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி.சாப்ரியா, இயக்குநர் ரீட்டா இந்துஜா சாப்ரியா ஆகியோர் முதல்வர் விஜய்யை சந்தித்தனர். அப்போது தமிழகத்தில் ரூ.2,500 கோடி முதலீட்டின் முன்னேற்றம், காற்றாலை மின்சக்தி துறையில் கூடுதல் முதலீடு மற்றும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஓசூருக்கு இங்கிலாந்து விண்வெளி, பாதுகாப்பு துறை பிரதிநிதிகள் வருகை, அக்டோபரில் இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் பிரதிநிதிகள் சென்னை வருகை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இப்பயணத்தின்போது லண்டனில் வாழும் தமிழர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதிக கூட்ட நெரிசல் மற்றும் பொதுப் பாதுகாப்பு கருதி லண்டன் காவல் துறை அனுமதி வழங்காததால், சந்திப்பு நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதற்காக லண்டன் வாழ் தமிழர்களுக்கு முதல்வர் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.
தமிழகத்தை நோக்கி வரும் தொழில் முதலீடுகளை சாத்தியமாக்க அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் லண்டன் பயணம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கும் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.