தவெக அரசின் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: டெல்டா விவசாயிகள் கருத்து

தவெக அரசின் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: டெல்டா விவசாயிகள் கருத்து
Updated on
2 min read

தஞ்சாவூர்: தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையான தள்ளுபடியையும், அதற்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடியை விகிதங்களின் அடிப்படையிலும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, இதை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுந்தர விமல்நாதன்: தமிழகத்தில் இதுவரை எந்த முதல்வரும் அறிவிக்காத வகையில், சிறு, குறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் என விவசாயிகளை தரம்பிரித்து கடன் தள்ளுபடி அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது.

அனைத்து விவசாயிகளும் ஒரே உணவு தானியங்களைதான் உற்பத்தி செய்கின்றனர். அப்படியிருக்க, முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. தமிழக முதல்வரை அதிகாரிகள் தவறான முறையில் வழிநடத்துவதாக கருதுகிறோம்.

உற்பத்திச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பயிர்க் கடன் தள்ளுபடிக்கு அளவுகோல் வைத்துள்ளதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, பயிர்க் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடியை முழுமையாக வழங்க வேண்டும்.

காவிரி உரிமை விவசாய செயற்பாட்டாளர் வெ.ஜீவக்குமார்: நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க் கடன்தான் பெரும் உதவியாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இருந்த அரசுகள் விவசாயிகளுக்கான பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளை கடன் சுமையில் இருந்து மீட்டன.

ஆனால், தற்போது 2025 மே 1 முதல் 2026 பிப்.28 வரை என கணக்கிடுவதை 2024-ல் இருந்து என நீட்டிக்க வேண்டும். தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளின் அனைத்து கடன் தொகையையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

காவிரி பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம்: விவசாயிகளை சிறு, குறு, பெரு விவசாயிகள் என தரம் பிரித்து பார்ப்பதே தவறு. ஏனெனில், ஒரு ஏக்கர் வைத்துள்ள விவசாயிக்கு ரூ.5 ஆயிரம் நஷ்டம் என்றால், 10 ஏக்கர் வைத்துள்ள விவசாயிக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டம் என்றுதான் கணக்கிட வேண்டும். என்ன பயிர், எத்தனை ஏக்கர் நஷ்டம் என்பதை யெல்லாம் கணக்கிட்டு நஷ்டஈடு வழங்கினால்தான் விவசாயிகளுக்கு முழு பயன் கிடைக்கும்.

தமாகா விவசாய அணி காவிரி டெல்டா மண்டல துணைத் தலைவர் வயலூர் ராஜேந்திரன்: இந்த அறிவிப்பால் ஒரு ஏக்கர் அல்லது 2 ஏக்கர் மானாவாரி நெல் சாகுபடி செய்ய கடன் வாங்கிய விவசாயிகள் மட்டுமே பயனடைவர்.

2 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்ட விவசாயிகள் மற்றும் கரும்பு, வாழை, வெற்றிலை, மஞ்சள், திராட்சை, கொய்யா, மலர், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட தோட்டப் பயிர்களை ஒரு ஏக்கர் சாகுபடி செய்யும் விவசாயிகள்கூட கடன் தள்ளுபடி பெறமுடியாது. முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு கடும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் காவிரி தனபாலன்: தேர்தல் வாக்குறுதியில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் கடன் தள்ளுபடி செய்வேன் என்றார்கள். ஆனால், தற்போது சிறு, குறு விவசாயிகளுக்கு 25 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு வெறும் 5 சதவீதமும் மட்டுமே கடன் தள்ளுபடி வழங்கி உள்ளனர்.

இதன்மூலம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்ற பெயரில் அல்வா கொடுத்துவிட்டனர். தவெகவுக்கு வாக்களித்த விவசாயிகளை முதல்வர் விஜய் ஏமாற்றிவிட்டார்.

தவெக அரசின் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: டெல்டா விவசாயிகள் கருத்து
மேகேதாட்டு அணை விவகாரம்: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் - கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in