

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன்
மதுரை: “தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் பெயர் அறிவிப்பில் ஈர்ப்பு இருக்கிறது. ஆனால் எந்த பலன்களும் இல்லை” என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
மதுரையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என ஏற்கெனவே 3 ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளது.
இதில் நான்காவதாக தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வரவேற்பும், குறைபாடுகளும் சரி சமமாக இருக்கிறது. திட்டத்தின் பெயர் அறிவிப்பில் ஈர்ப்பு இருக்கிறது. ஆனால் எந்த பலன்களும் இல்லை. இந்த அறிவிப்பு தேர்தலுக்கு மட்டுமே பயன்படும்.
இத்திட்டத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கே கடைசி மாத சம்பளத்தில் சரி பாதி ஓய்வூதியம் கிடைக்கும் என அறிவித்துள்ளனர். அதனை நிபந்தனையின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 4 லட்சம் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், அவுட்சோர்சிங் பணியாளர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். தொகுப்பூதிய பணியாளர்களின் சம்பளத்தில் சரிபாதி அல்லது குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டப் பலன்கள் புதிய திட்டத்தில் இல்லை. அந்தக்காலத்தில் படையெடுத்துச்சென்று நாட்டை பிடித்தனர்.
தற்போது வெளிநாடுகளுக்கு படையெடுத்து சென்று முதலீடுகளை பெற்றுவருகின்றனர். இதற்கு அவசியமே இல்லை. தமிழகத்திலுள்ள ஒன்றரை கோடி அரசு ஊழியர்களிடம் ஜிபிஎஃப் பணம் பிடித்தாலே அரசுக்கு பல ஆயிரம் கோடி முதலீடாக கிடைக்கும். தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பெயர் மாற்றம் மட்டுமே செய்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டமே சிறந்தது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தில் குறைபாடுகள் நிறைய இருக்கிறது. பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, இமாச்சல்பிரதேச மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும்போது, இந்தியாவில் 11 சதவீதம் வளர்ச்சியடைந்த தமிழகத்தில் அமல்படுத்த முடியாதது ஏன்? இது தொடர்பாக நாளை சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கவுள்ளோம்” என்று அவர் கூறினார்.
மாநிலத் தலைவர் எஸ்.சுகமதி, மாநிலச் செயலாளர் ரகுமத்துல்லா, மாநில துணைத் தலைவர் விஜயகுருசாமி ஆகியோர் உடனிருந்தனர்.