

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகளை கைது செய்திருப்பதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் ஜீவாதாரமாக உள்ள காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு அடிப்படையில், தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில்லை.
இதன் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காவிரி நீர் ஆதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் பல விவசாய சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதன் ஒருபகுதியாக ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சங்கரய்யா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்றவர்களை நாக்பூரில் ரயிலிருந்து கீழே இறக்கி கைது செய்துள்ளனர்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக ரீதியாக போராடும் உரிமையை பறிக்கும் வகையில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவித்து அவர்கள் டெல்லி செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.