செஞ்சி தொகுதியில் கோட்டையை பிடிக்கப் போவது யார்?

செஞ்சி தொகுதியில் கோட்டையை பிடிக்கப் போவது யார்?
Updated on
3 min read

விழுப்புரம்: யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற செஞ்சி கோட்டையை உள்ளடக்கியது செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி. உலக பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், சமணர்கள் வாழ்ந்த கற்படுகைகள், சமணர் கோயில்கள், கல்வெட்டுகள், பல்லவர் கால குடவரை கோயில்களான சிங்கவரம் ரங்கநாதர், மேலச்சேரி மத்தலேஸ்வரர் சிவன் கோயில், மண்டகப்பட்டு பல்லவர் கால குடவரை கோயில், மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோயில், பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டப்பட்ட மாமமல்லபுரம் கடற்கரை கோயிலை போன்று பனமலை ஸ்ரீதாளகிரீஸ்வரர் மலைக்கோயில் என ஆன்மிகம் நிறைந்த வரலாற்று சுவடுகளை கொண்டது இந்த சட்டப்பேரவைத் தொகுதி.

செஞ்சித் தொகுதியில் செஞ்சி, அனந்தபுரம் பேரூராட்சிகள், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் ஒன்றியத்தில் உள்ள 115 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன. விவசாய பூமி. ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயிகள் வாழ்கின்றனர்.

நீர் மேலாண்மையில் பின் தங்கி இருக்குகிறது. விழுப்புரம் - வேலூர் மற்றும் திண்டிவனம் - திருவண்ணாமலைக்கு இடையே அமைந்துள்ள செஞ்சி தொகுதிக்கு போக்குவரத்து வழித்தடம் மேம்பட்டு வருகிறது.

ரயில் வழித்தடம் இல்லை

அதேநேரத்தில் ரயில் போக்குவரத்து கானல் நீராகவே உள்ளது. செஞ்சி வழியாக திண்டிவனம் - திருவண்ணாமலைக்கு புதிய ரயில் தடம் அமைக்கும் பணி, கடந்த 20 ஆண்டுகளாக நீள்கிறது.

‘நிதி ஒதுக்கவில்லை’ என்று திமுக அரசும், ‘நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கவில்லை’ என்று மத்திய ரயில்வே துறையும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். மொத்தத்தில் இருதரப்பிலும் இத்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர யாரும் முனைப்பு காட்டவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை என இரு மாவட்ட மக்களவை உறுப்பினர்களும் தீவிரம் காட்டவில்லை என்பதை இங்குள்ள மக்கள் குறையாக தெரிவிக்கின்றனர்.

மக்களின் கோரிக்கைகள்

செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக தமிழக அரசு அதிகார பூர்வாக அறிவிக்க வேண்டும். கோட்டையின் மலை உச்சிக்கு சென்று வர ரோப் கார், சுற்றுலாதுறை மூலம் உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும். குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், வரலாற்றை தெரிந்து கொள்ள நவீன தகவல் மையம், பயணிகள் மையம் உள்ளிட்டவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேல்மலையனூர் ஒன்றியத்தில் பனை மரங்கள் அதிகளவு இருப்பதால் பனை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும். மேல்மலையனூரில் பக்தர்களுக்கு கூடுதல் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி மற்றும் விரிவு படுத்தப்பட்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும். செஞ்சிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்து, தூய்மையாக பராமரிக்க வேண்டும். அவலூர்பேட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதையும் இங்குள்ள மக்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் பற்றாகுறை, சென்னை, செங்கல்பட்டுக்கு வேலைவாய்ப்பு தேடிச் செல்வதை தவிர்க்க புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும் என்பது நீண்ட கால கனவாக மக்களிடம் இருக்கிறது.

திமுகவின் ஆதிக்கம்

செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதி, இதுவரை 16 தேர்தலை சந்தித்துள்ளது. 9 முறை வென்று திமுக ஆதிக்கம் செலுத்துகிறது. காங்கிரஸ் 3 முறையும், உழைப்பாளர் கட்சி, பாமக, அதிமுக மற்றும் சுயேச்சை என தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. 1977, 1980, 1989-ல் திமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார். 2001-ல் அதிமுகவைச் சேர்ந்த சேவல் ஏழுமலையும், 2011-ல் பாமகவைச் சேர்ந்த கணேஷ்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர். 2016, 2021-ல் தொடர்ந்து இரு முறை செஞ்சி மஸ்தான் (திமுக) வெற்றி பெற்று, 3-வது முறையாக களம் காண்கிறார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவராக 5 முறை இருந்துள்ளார்.

இரண்டாவது முறையாக எம்எல்ஏ பதவிக்கு வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில், சிறுபான்மையின நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான் பொறுப்பேற்றார். அரசு கலைக் கல்லூரி, புதிய சாலை மேம்பாடு, பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், உள்ளாட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

அதேநேரத்தில் சகோதரர், மகன், மருமகன் என குடும்ப உறுப்பி னர்களின் ஆதிக்கம், வஃக்ப் வாரிய சொத்து விவகாரம், டெண்டர் பணிகளில் அதிகாரம் செலுத்தியது, வேண்டியவர்களுக்கு மட்டும் கட்சி மற்றும் உள்ளாட்சியில் பதவி வழங்கியது, சாராய வியாபாரியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் மஸ்தானின் அமைச்சர் பதவி மற்றும் கட்சி பதவி பறிக்கப்பட்டது. உட்கட்சி பூசலால் அதிருப்தி உருவானது. தனது சாதுர்யமான அரசியலால், பின்னடைவுகளில் இருந்து மீண்டவர், பறிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர் பதவியை மீண்டும் பெற்றார்.

கூட்டணி பலம், அரசின் சாதனை பலம், பண பலம் ஆகியவற்றை நம்பி களத்தில் சுழல் கிறார். இஸ்லாமியர்களின் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையுடன் உதயசூரியன் பார்வையில் வலம் வருகிறார். மஸ்தானை எதிர்த்து அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவைச் சேர்ந்த கணேஷ்குமார் போட்டியிடுகிறார். பொறியாளர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். செஞ்சி தொகுதியில் 2011-ல், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பாமகவில் ‘மாற்றம், முன்னேற்றம்' அன்புமணி என்ற புதிய அடையாளத்துடன் 2016-ல் போட்டியிட்டு மஸ்தானிடம் தோல்வி அடைந்தார். அதிமுக, பாமக பலத்தை நம்பி போட்டியிடுகிறார்.

இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவுக்கும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உள்ள வாக்குகள், அவருக்கு பலம் சேர்க்கலாம். இருப்பினும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கடைக்கண் பார்வை கிடைத்தால், வெற்றியை வசமாக்கலாம். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என சிறுபான்மையினர் வாக்குகளை பெற முயற்சி செய்து வருகிறார். 2-வது முறையாக திமுக வேட்பாளர் மஸ்தானை எதிர்த்து களம் காணும் கணேஷ்குமார், இம்முறை வெற்றியை தவறவிடக்கூடாது என்பதில் மாம்பழத்துடன் கவனமாக தேர்தல் பணியை மேற்கொண்டுள்ளார்.

‘இலவசங்கள் ஒரு அவமானம், நல்ல நிர்வாகம், ஆடு, மாடு மேய்ப்பது என்றாலும் அரசு வேலை’ என்ற முழக்கத்துடன் வழக்கம்போல் தனித்துப் போட்டியிடும் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணன் போட்டியிடுகிறார். வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் மக்களை சந்தித்து, ஏர் கலப்பை சின்னத்துக்கு வாக்குகளை கேட்டு வருகிறார்.

தேர்தல் களத்தில் புதியதொரு கட்சியாக களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சந்திரசேகரனும், திமுக மற்றும் பாமகவுக்கு நெருக்கடி கொடுக்கலாம். முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் வாக்குகளை கணிசமாக பிரிக்கக்கூடும். விஜயின் முகம் மட்டுமே பிரதானமாக இருந்தாலும், இக்கட்சியில் உள்ள இளையோர் அனுபவம் பெற்ற கட்சிகளுக்கு விசில் அடித்து அதிர்ச்சி வைத்தியம் அளிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,20,042

  • பெண் - 1,22,596

  • மூன்றாம் பாலினத்தவர் - 29

  • மொத்த வாக்காளர்கள் - 2,42,667

செஞ்சி தொகுதியில் கோட்டையை பிடிக்கப் போவது யார்?
“தொகுதி மறுவரையறை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்” - கிரண் ரிஜிஜு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in