தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 100 பேருடன் பெயரளவில் செயல்படுகிறது: உயர் நீதிமன்றம் வேதனை

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 100 பேருடன் பெயரளவில் செயல்படுகிறது: உயர் நீதிமன்றம் வேதனை
Updated on
1 min read

மதுரை: திண்டுக்கல் - திருச்சி வழித்தடத்தில் அரசு பேருந்துகளை இயக்காமலேயே 3 வெவ்வேறு பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முருகேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

போக்குவரத்துக் கழகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2022-ல் வேடசந்தூரிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தில் 3 வெவ்வேறு பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டதும், ஒரே வழித்தடத்தில் 3 பேருந்துகள் இயக்கப்பட்டது போன்ற போலி பதிவுகள் உருவாக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிளை மேலாளர் பி.கார்த்திக் ராஜா, இளநிலை உதவியாளர் பி.சிவராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒரே வழித்தடத்தில் வெவ்வேறு பயணச் சீட்டுகளை வழங்கி 3 பேருந்துகள் இயக்கப்பட்டதாக போலி பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. டீசல் தொகை மற்றும் சம்பளத் தொகையிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கிளை மேலாளர், இளநிலை உதவியாளருக்கு சிறிய தண்டனை வழங்கப்பட்டு விவகாரத்தை மூடி மறைத்துள்ளனர்.

இந்த மோசடி மற்ற வழித்தடங்களிலும் நடந்துள்ளதா என்பது விசாரிக்கப்படவில்லை. உயர் அதிகாரிகளின் ஈடுபாடு இல்லாமல் இத்தகைய மோசடி நடந்திருக்க முடியாது. இதை விசாரிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை புகாரை போக்குவரத்து கழகத்துக்கே அனுப்பியுள்ளது. தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியர்களைக் கண்காணிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத் துறை வெறும் 100 ஊழியர்களுடன் பெயரளவில் மட்டும் செயல்படுவது வருந்தத்தக்கது. ஊழல் தடுப்புத் துறைக்கு வரும் ஏறக்குறைய அனைத்துப் புகார்களும் சம்பந்தப்பட்ட துறையின் தலைவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, போலி டிக்கெட் மோசடி மற்ற வழித்தடங்களிலும் நடந்துள்ளதா? அதில் மேலாண்மை இயக்குநருக்கு தொடர்பு உள்ளதா? என்பதைக் கண்டறிய லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும். முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 100 பேருடன் பெயரளவில் செயல்படுகிறது: உயர் நீதிமன்றம் வேதனை
மதுரை மாவட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆய்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in