

சென்னை: ‘கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிகளை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும்’ என அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ராயபேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
தமிழக காங்கிரஸில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 77 மாவட்டங்களில் 74 தலைவர்கள் உள்ள நிலையில் அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ‘`தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூருக்கு, முழு ஒத்துழைப்பு வழங்க மாவட்ட காங்கிரஸ் தலைவர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்கிற உறுதிமொழியை தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வர் விஜய், பாஜக கட்டுப்பாட்டில் உள்ள அதிமுகவோடு இணைந்து ஆட்சி அமைத்தால் அது மதச்சார்பின்மைக்கு ஆபத்தாகி விடும். அதனால், மதச்சார்பற்ற சக்திகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளார்.
ஒரு பக்கம் திமுக அரசு ஏற்படுத்தியுள்ள கடன் சுமை, அரசு நிர்வாகத்தில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள குளறுபடிகள், மற்றொருபுறம் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு என்ற இரட்டை தாக்குதல்களை எதிர்கொண்டு, மிகச்சிறப்பாக செயல்பட்டு சாதனைகளை படைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது, காமராஜர், எம்ஜிஆர் போன்று தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக முதல்வர் உருவெடுப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமானமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே அணை கட்ட ஒரு செங்கல்லைக்கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. கூறியதை இக்கூட்டம் வரவேற்கிறது.
காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும்'’ என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் விதம், மத்திய பாஜக அரசை கண்டித்து நடத்தப்பட வேண்டிய போராட்டங்கள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.