

சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.2,022 கோடி, சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு ரூ. 17,150 கோடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.2,022 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு 17,150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:
> மின்சார வாகனங்கள் பழுது பார்க்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படும். இத்திட்டம் மூலம் 22,500 நபர்கள் பயன்பெறுவார்கள்.
> அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஏஐ கற்றல் தொழில் பிரிவு ரூ.10 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
> 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
> போட்டி தேர்வுகளுக்காக கூடுதல் பயிற்சி வகுப்புகளை நடத்த 3.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
வெற்றி திறன் பயிற்சித் திட்டம்
> 12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், ஒரு லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் வெற்றி திறன் பயிற்சித் திட்டம் ரூபாய் 150 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
> செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் இணைய கருவிகள் குறித்த அறிவுக்கான தமிழ்நாடு பள்ளி திட்டம் கூடுதலாக 2, 600 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு 1,051 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையில் வெளியான அறிவிப்புகள் விவரம்:
> தமிழகத்தில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ. 50 கோடியில் உருவாக்கப்படும்.
> விளையாட்டில் ஆர்வம் கொண்ட 8 முதல் 18 வயதிற்குட்பட்ட இளம் பள்ளி மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் 500 வீரர்களுக்கு நிதி உதவி வழங்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
> அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அருகாமை பகுதிகளில் விளையாட்டு வசதிகள் கொண்ட உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் உருவாக்கப்படும்.