

சென்னை: “இந்த தேர்தலில் வெற்றி பெறவேண்டியது ‘தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?’ என்று முதல்வர் ஸ்டாலின் பிரிவினைவாத அரசியலை பேசி, கேள்வி கேட்டு ஓட்டு வேட்டைக்காக நாடகம் நடத்துகிறார்” என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியின் திருப்பரங்குன்றம் கோயில் வருகையும் தமிழ் கடவுள் முருகன் வழிபாடும் தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை உருவாக்கி ஆன்மிக அரசியல் சக்தியை உலகிற்கு உணர்த்தும்.
மதவெறி பிடித்த திமுக அரசின் மதவாத பிரிவினைவாத சதியை முறியடித்து இந்து, இஸ்லாமிய மக்கள் ஒன்றுபட்டு தமிழகத்தில் சகோதரர்களாக வாழ்வதை உறுதிப்படுத்தும். தமிழகத்தில் சிறுபான்மை வாக்கு வங்கிக்காக மதக் கலவரத்தை தூண்டி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட நினைத்த திமுகவின் பயங்கரவாத திட்டத்தை முறியடிக்கும். இந்த தேர்தலில் வெற்றி பெறவேண்டியது “தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?” என்று முதல்வர் ஸ்டாலின் பிரிவினைவாத அரசியலை பேசி, கேள்வி கேட்டு ஓட்டு வேட்டைக்காக நாடகம் நடத்துகிறார்.
தமிழகத்தையும் டெல்லியையும் முதல்வர் ஸ்டாலின் எந்நாளும் ஊழலால், அவதூறு பிரச்சாரத்தால் பிரிக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் டெல்லியுடன் கூட்டு சேர்ந்து 10 ஆண்டுகால ஊழலில் திமுக குடும்பத்தின் வருமானம் மட்டுமே உயர்ந்தது. தமிழகத்தை ரூபாய் 10.50 லட்சம் கோடி கடனில் மூழ்கவிட்ட ஊழல் திமுக அணி வீழும். முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் ஊழல் பணத்தில் ஓட்டுக்கு ஒரு லட்சம் கொடுத்தாலும் வீட்டுக்கு 5 லட்சம் கொடுத்தாலும் மக்கள் திமுகவை வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டும் தான் வாக்களிப்பார்கள்.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்சார வரி உயர்வு, பால் விலை உயர்வு, மளிகைப் பொருள் விலை உயர்வு என தொடர் விலைவாசி ஏற்றத்தால் பரிதவித்துப் போகும் மக்களை திசை திருப்ப, ஊழல், வகுப்பு வாதம், மதவாதம், பிரிவினைவாதம் பேசி, கஞ்சா, கள்ளச்சாராயம் படுகொலை, பயங்கரவாதம் கொடிகட்டி பறந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் சொந்த மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வராக அரியணை ஏற கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினின் திமுக அணி தமிழகத்தில் படுதோல்வியடையும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.