

தமிழக பாஜக தலைமை அலுவலகம் - இடம்: சென்னை; படம்: எம்.கருணாகரன்.
சென்னை: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்று அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஏற்றவே விடமாட்டோம் என்று திட்டமிட்டு சதி செய்து, சட்டத்தை மீறி நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, மிகப் பெரிய அராஜகத்தை தமிழக அரசு செய்தது மன்னிக்க முடியாதது.
திமுக அரசின் தூண்டுதலின் பேரில், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டு மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திமுக கூட்டணி செய்து வரும் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்.
‘முருகன் என் பாட்டன்’ என்று சொல்லி போஸ்டர் அடித்து விளம்பரம் தேடிக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி வந்த சீமானின் நரித் தந்திர முகமூடி திருப்பரங்குன்றம் விஷயத்தில் வெளிப்பட்டு விட்டது.
தவெக தலைவர் விஜய், திருப்பரங்குன்றம் முருகன் விவகாரத்தில், திமுகவின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளாமல், தவெகவின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
தவெக தலைவர் விஜய், தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக, அமைதிப் பூங்காவாக வளர்ச்சியை நோக்கி செயல்படும் வகையில் திமுக அரசின் தவறான போக்கை நேர்மையுடன் கண்டிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.