

சென்னை: தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் 8-வது கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், மீண்டும் அவை கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் அமைந்தது. இந்த சட்டப்பேரவையின் 8-வது கூட்டத் தொடர் கடந்த ஜன.20-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் 24-ம் தேதி வரை நடைபெற்றது. இறுதி நாள் முதல்வர் ஸ்டாலின் பதிலுரையுடன், பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து, பேரவையில் இடைக்கால பட்ஜெட், பிப்.17-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, 17-ம் தேதி பொது நிதி பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். அதன்பின் அன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பேரவைக்கூட்டத்தை 20-ம் தேதிவரை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பிப்.18- ம் தேதி இரு பட்ஜெட்கள் மீதான விவாதம் தொடங்கியது. அன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய மாநில அரசுகள் இடையிலான உறவு தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் முதல் பாகத்தை பேரவையில் தாக்கல் செய்து அதுதொடர்பாக பேசினார். தொடர்ந்து, நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேரவையில் உரையாற்றினார். இறுதி நாளான நேற்று பேரவையில் கடந்த 2025-26-ம் நிதியாண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதன்பின், இரு பட்ஜெட்கள் மீதான உரைக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அதன்பின், நிதி ஒதுக்கம் தொடர்பான சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. இதுதவிர, கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் தனியார் பல்கலைக்கழகங்கள் குறித்து நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டன. ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ சட்டப்பேரவையின் கடைசிக்கூட்டம் என்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதிமுக மற்றும் பாமகவில் அன்புமணி ஆதரவு உறுப்பினர்கள் வராத நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் ஆகியோர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர். தொடர்ந்து, பேரவைத் தலைவரும் வாழ்த்தும மற்றும் நன்றி தெரிவித்து பேசினார்.
நிறைவாக, பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அமைச்சர் கே.என்.நேரு கொண்டு வந்தார். இதையடுத்து, பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.