தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, ராஜீவ் குமார் ஆகியோர் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். படம்: பிடிஐ
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ல் தேர்தல்: மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநிலங் களிலும் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, ராஜீவ் குமார் ஆகியோர் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அசாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரியில் அண்மையில் ஆய்வு செய்தோம். அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம்.
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புதீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது. தகுதியுள்ள ஒரு வாக்காளர்கூட விடுபடாமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. எஸ்ஐஆர் பணிக்காக கடினமாக உழைத்த அனைத்து பிஎல்ஓக்களுக்கும் வாழ்த்துகள்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இளம் தலைமுறையினர், புதிய வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை கண்டிப்பாக செலுத்த வேண்டுகிறேன். உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க நீங்கள் தேர்தலில் வாக்களிப்பது அவசியமாகும். இந்தியாவின் ஒவ்வொரு தேர்தலும் ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தற்போது மீண்டும் ஒரு திருவிழாவை கொண்டாட உள்ளோம்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்தில் 6.44 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 5.67 கோடி, கேரளாவில் 2.7 கோடி, அசாமில் 2.5 கோடி, புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி, கனடா நாடுகளின் மக்கள்தொகையைவிட அதிகம்.
ஒட்டுமொத்தமாக 824 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 20 நாடுகளின் பிரதிநிதிகள் தேர்தலை மேற்பார்வையிட உள்ளனர். பொதுத்தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய கடந்த 12 மாதங்களாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் எஸ்ஐஆர் பணி மிகவும் முக்கியமானது. மேலும் வாக்குப்பதிவின்போது பொதுமக்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்திருக்க சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களும் செயலி வாயிலாக உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இத்தேர்தலில் 750 முதல் 900 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படும். தமிழகத்தில் 75,032, புதுச்சேரியில் 1,099, கேரளாவில் 30,471, அசாமில் 31,486, மேற்கு வங்கத்தில் 80,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக 2.19 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் பணியில் 25 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். பல்வேறு படைப் பிரிவுகளை சேர்ந்த 8.5 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். வாக்கு எண்ணும் பணியில் 40,000 அலுவலர்கள் பங்கேற்பார்கள்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 7-ம் தேதி நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 10, அசாம் பேரவையின் பதவிக்காலம் மே 20, கேரள பேரவையின் பதவிக் காலம் மே 23, புதுச்சேரி பேரவையின் பதவிக் காலம் ஜூன் 15-ம் தேதிகளில் நிறைவடைகிறது.
இந்த சூழலில் புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா, அசாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற 72 மணி நேரத்துக்குள் அனைத்து புள்ளி விவரங்களும் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாமில் இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது. இந்த மாநிலங்களின் அரசுகள் இனிமேல் புதிய திட்டங்களை அறிவிக்கக்கூடாது. அரசியல் வன்முறைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். இதுதொடர்பாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது அதிக அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டது. சுமார் ஒரு மாதம் வரை தேர்தல் நீடித்தது. தற்போது 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
6 மாநிலங்களில் ஏப்.9, 23-ல் இடைத்தேர்தல்
கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் மக்கள் பிரதிநிதிகளின் மறைவால் காலியாக உள்ள சட்டப்
பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி, கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 4 மாநிலங்களில் முதல் கட்டமான ஏப்ரல் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், கர்நாடகாவில் பாகல்கோட் (ஹெச்.ஒய்.மேட்டி), தெற்கு தாவணகெரே (ஷாமனூர் சிவசங்கரப்பா) ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
குஜராத், மகாராஷ்டிராவில் இரண்டாம் கட்டமான ஏப்ரல் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். இந்த 6 மாநில இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மே 6-ம் தேதிக்குள் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
