

சென்னை: ‘தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிரான விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டுக்கே திமுக ஆதரவளிக்கும்’ என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், 'தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அல்லது அவரைப் பதவியி லிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் இதுகுறித்து, செய்தியாளர்களிடம் திமுக செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறியதாவது: இண்டியா கூட்டணி கூட்டம், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை மாற்றவோ அல்லது பதவியிலிருந்து நீக்கவோ போவதில்லை. அதைச் செய்ய வேண்டியது நாடாளுமன்றம்தான்.
அங்கு திமுகவுக்கு கணிசமான எண்ணிக்கையில் எம்பி.க்கள் உள்ளனர். எனவே, இந்த தனிநபர் பிரச்சினை அவைக்கு வரும்போது, நாங்கள் ஞானேஷ்குமாருக்கு எதிராகவே நிற்போம்.
மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் ஞானேஷ்குமார் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கட்சியின் நலன் மற்றும் அரசியல் நலன் சார்ந்த விவகாரங்களில் இருந்து நாங்கள் என்றுமே பின்வாங்க மாட்டோம்.
இந்த விஷயம் நாடாளுமன்றத்துக்கு வரும்போது நாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்போம். எனவே, நாங்கள் இந்த அமைப்பின் அமர்விலோ அல்லது இந்தக் கூட்டத்திலோ கலந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.