

மதுரை: திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதி அதிகார வரம்பை மீறியுள்ளார் என்று நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த 26 மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று நடைபெற்றது.
அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடும்போது கூறியதாவது: தெளிவான, உறுதியான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். கோயிலில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வழக்கத்தை மாற்ற தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டப்படி செல்லுமா என்பதே வழக்கின் மையக் கேள்வியாக உள்ளது.
கலாச்சாரம், ஆகம விதிகள், பூஜை விதிகள், அர்ச்சனை முறைகள், வழிபாட்டு உரிமை சட்டம் ஆகிய அனைத்தும் முறையாகவும் சட்டப்பூர்வமாகவும் இருக்கும் நிலையில், அதை மாற்றும் வகையில் தனி நீதிபதி உத்தரவிட்டது சரியல்ல. ஒரு தனி நபர் புதிதாகக் கூறும் கலாச்சாரத்தை ஏற்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
திருப்பரங்குன்றத்தில் கோயில், அறநிலையத் துறை, தேவஸ்தானம் மற்றும் அறங்காவலர் குழு ஆகியோரின் ஒருமித்த முடிவின்படி, உச்சிப்பிள்ளையார் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதை மாற்றக் கோரும் மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆவணங்களும், வரலாற்று ஆதாரங்களும் இல்லை. 1920-ல் மாவட்ட நீதிபதி முழு மலையையும் ஆய்வு செய்தபோது, மலை உச்சியில் தர்கா மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தூண் இருந்தது தொடர்பாக எந்தக் குறிப்பும் இல்லை. தீபம் ஏற்றுவது போன்ற கோயில் நடைமுறைகள், உரிமையியல் தன்மை கொண்டவை.
இதுபோன்ற வழக்குகள் உரிமையியல் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்ற தனி நீதிபதி நேரடியாகத் தலையிட முடியாது. மதுரை பாண்டி கோயில் தொடர்பான வழக்கிலும், அர்ச்சகர் பூஜை செய்யும் உரிமை குறித்து உரிமையியல் நீதிமன்றத்தை அணுகவே தீர்ப்பளிக்கப்பட்டது. எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் அறநிலையத் துறைக்கே உள்ளது. ஒரு கோயிலில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கங்களை திடீர் உத்தரவால் மாற்ற முடியாது. தனி நீதிபதி தனது அதிகார எல்லையை மீறி, அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நீதிபதிகள், “திருப்பரங்குன்றம் வழக்கில் உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகள் என்ன? உயர் நீதிமன்ற தனி நீதிபதி இதுபோன்ற விவகாரங்களில் தலையிட முடியுமா என்பதற்கான சட்ட ஆதாரங்கள் மற்றும் அறநிலையத் துறை விதிகள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
மனுதாரர் ராம.ரவிக்குமார் தரப்பில், “தனி நீதிபதி முன்னிலையில் தாக்கல் செய்த மனுவிசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூற முடியாது. பூஜை, அர்ச்சனை, தரிசனம் ஆகியவை ஆகம விதிகளுக்கு உட்பட்டவை. கார்த்திகை தீபம் ஏற்றுவதில் எங்கும் ஆகம விதிகள் நடைமுறைப்படுத்தவில்லை. மதச்சார்பற்ற அரசு, ஒரு சார்புடன் நடந்து கொள்ளக் கூடாது. பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. மற்றொரு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தர்கா தரப்பு, மலைஉச்சியில் உள்ள கோயில் தல விருட்சத்தை ஆக்கிரமித்து வருவதாகக் கூறி, அது தொடர்பான புகைப்படங்களைத் தாக்கல் செய்தார்.
அப்போது தர்கா தரப்பில் “மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்கக் கூடாது. இது உரிமையியல் சார்ந்த மனு” என்று கூறப்பட்டது.பின்னர் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஜன. 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.