

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தையுடன் அதன் தாயார் மற்றும் மருத்துவர் வசுமதி வேதாந்தம்.
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த ஏழைப் பெற்றோருக்கு பிறந்த குறைப்பிரசவக் குழந்தைக்கு, சிக்கலான பார்வை மீட்டெடுப்பு அறுவை சிகிச்சையை ராதாத்ரி நேத்ராலயா வெற்றிகரமாகச் செய்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'சம்பந்தப்பட்ட குழந்தை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, குறைப்பிரசவக் குழந்தைகளைப் பாதிக்கும் கொடிய கண் நோயான ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி (ROP - Retinopathy of Prematurity) நோயுடன் ராதாத்ரி நேத்ராலயாவுக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது ராதாத்ரி நேத்ராலயாவின் சேவைப் பிரிவான குருப்ரியா விஷன் ஆராய்ச்சி அறக்கட்டளை ( Gurupriya Vision Research Foundation ) சார்பில், குழந்தைக்கு இலவசமாக விழித்திரைக்குள் Anti-VEGF ஊசி மற்றும் லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை அளித்ததோடு குழந்தையின் விழித்திரை நிலைத்தன்மையற்றது என்று பெற்றோரிடம் அறிவுறுத்தப்பட்டு, அவர்கள் தொடர் பரிசோதனைக்கு குழந்தையை அழைத்து வருமாறு சொல்லப்பட்டது.
ஆனாலும், குழந்தையின் பெற்றோர் தொடர் சிகிச்சைக்காக வரவில்லை. தொடர்பு கொண்டு கேட்டபோது, குழந்தை நன்றாகப் பார்ப்பதாகக் கூறி வந்தனர்.
இந்நிலையில் தற்போது மூன்று வயதான அந்தப் பெண் குழந்தைக்கு திடீரென பார்வை தெரியவில்லை என்றும், பொருட்கள் மீது மோதிக் கொள்வதாகவும் கூறி பெற்றோர் மீண்டும் ராதாத்ரி நேத்ராலயாவுக்கு அழைத்து வந்தனர்.
பரிசோதனையில் குழந்தைக்கு இரு கண்களிலும் புதிதாக ரத்தக்கசிவு மற்றும் விழித்திரை விலகல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து உடனடியாக இரு கண்களிலும் தையல் இல்லாத, நவீன துளை வழி, லென்ஸை பாதுகாக்கும் விட்ரெக்டமி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
உரிய நேரத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் குழந்தையின் பார்வை முழுமையாக மீட்கப்பட்டது. பொருட்கள் மீது பார்வையை நிலைநிறுத்தி தெளிவாக பார்க்கத் தொடங்கியுள்ளது.
இரு கண்களிலும் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் HCL பவுண்டேஷன் உதவியுடன் இலவசமாக செய்யப்பட்டது.
இது குறித்து அறுவை சிகிச்சை செய்த ராதாத்ரி நேத்ராலயாவின் விட்ரியோ - ரெட்டினா (Vitreoretinal surgeon) அறுவை சிகிச்சை நிபுணரும், குழந்தைகள் விழித்திரை சிறப்பு நிபுணருமான ( Pediatric retina specialist) டாக்டர் வசுமதி வேதாந்தம் கூறுகையில், “இந்தக் குழந்தை ராதாத்ரி நேத்ராலயாவின் ’புராஜெக்ட் விஷன் ஆன் வீல்ஸ்’ மூலம் கண்டறியப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா முழுவதும் இதுவரை 1,60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ROP பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.