

விருதுநகர்: “தமிழகத்தில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறையில் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது. ஊழல் செய்தவர்கள், திட்டப் பணிகளுக்கு கமிஷன் வாங்கியவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று அவர் அளித்த பேட்டியில், “மக்கள் மாற்றம் வேண்டும் என்பதற்காக விஜய்க்கு வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் நேர்மையான ஆட்சி வர வேண்டும் என்பதற்காகவும், பாஜக உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆதரவுடன் நல்லாட்சி நடந்து வருகிறது.
100 நாள் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் நிதி நிலை பற்றியும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீரமைக்கவும் ஊழலஅற்ற அரசைக் கொடுக்கவும் விஜய் செயல்பட்டு வருகிறார். அவரது முயற்சிகளுக்கு தோள்கொடுக்க வேண்டியது எங்கள் கடமை.
ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்கும்போது, இதுவரை யார் யாரெல்லாம் ஊழல் செய்தார்களோ, மடியில் கனம் உள்ளதோ, நம்மை பிடித்துவிடுவார்கள் என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் அரசின் கவனத்தை திசை திருப்ப வேறுவிதமாக கேள்விகளை கேட்டுவருகிறார்கள். இதை நரித்தனம் என்றுதான் நான் கூறுவேன்.
தோற்றவர்கள், தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஜோசியக்காரர் கூறுவதை நம்பி பெரிதாக்கி வருகிறார்கள். எல்லா ஜோசியக்காரர்களுக்கும் நாம் பதில் சொல்ல முடியாது. தமிழகத்தில் மிக முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிதான் பேச வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. விவசாய பரப்பளவு குறைந்து வருகிறது. சுமார் 20 ஆயிரம் ஹெக்டேரில் நுண்ணீர் பாசன திட்டங்கள் மூலம் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் பிரச்சினைகளையும் விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளையும் நாம் பேச வேண்டிய நேரம் இது. வேறு எதற்கும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
நல்ல திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. எந்தெந்த திட்டங்களுக்கு கமிஷன் வாங்கினார்களோ அதுபோன்ற திட்டங்கள்தான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அடுத்து நியாயமான முறையில் இத்திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்.
தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது. இதை தடுத்தாலே முக்கிய திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்திவிடலாம். யாரெல்லாம் ஊழல் செய்தார்களோ, யாரெல்லாம் திட்டப் பணிகளுக்கு கமிஷன் வாங்கினார்களோ அவர்கள் மீது அமைச்சர்களும் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்கு முன்பாக அவர்கள் நிறுத்தப்பட வேண்டும்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர வேண்டும். ஜனநாயகத்திற்கு இது மிகவும் முக்கியமானது. தவறு செய்வதற்கு என்றே பிறந்தவராகிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. மிகப்பெரிய இயக்கமாக இருந்த அதிமுக இன்று இந்த நிலைக்கு வருவதற்கு காரணம் அவர்தான்.
விஜய் ஆட்சி 5 ஆண்டுகள் மட்டுமல்ல மீண்டும் ஆட்சிக்கு வரும். இந்த ஆட்சியை விழ வைக்க பல முன்னாள் அமைச்சர்கள் முழு நேரமாக யோசித்து வருகிறார்கள். விவசாயிகளின் தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணையாக இருக்கும். தமிழகத்தில் விவசாயம் மேம்பட என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் தமிழ்நாடு கங்கிரஸ் கமிட்டி தமிழக அசுக்கு உடனிருந்து செய்யும்” என்று கூறினார்.