

தூத்துக்குடி: அமைச்சரின் பெயரை சொல்லி அதிகாரிகளை தவெகவினர் மிரட்டுவதாகவும், இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க இருப்பதாகவும் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் இன்று (ஆக.28) நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் சி.பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், “கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தூத்துக்குடி மாநகராட்சி வரலாற்றுச் சிறப்பு மிக்க வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.
நாம் பொறுப்புக்கு வந்தபோது 7 நாட்களுக்கு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தினசரி குடிநீர் சப்ளை செய்யும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். அதுபோல மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளோம். ஒரே நாளில் 10 செ.மீ., மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால்களை அமைத்துள்ளோம்.
மழைநீர் செல்வதற்கு முன்பு 3 வழித்தடங்களே இருந்த நிலையில் தற்போது 14 வழித்தடங்களை உருவாக்கியுள்ளோம். மேலும், நகரை பசுமையாக்குதல், அழகுபடுத்துதல் போன்ற பணிகளையும் செய்துள்ளோம். தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் எங்கள் பணிகள் தொடரும்” என்றார் மேயர்.
கடும் வாக்குவாதம்:
தொடர்ந்து கூட்டப் பொருளை மாநகராட்சி ஊழியர் படிக்க தொடங்கிய நேரத்தில் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த மந்திரமூர்த்தி, திமுகவில் இருந்து தவெகவில் இணைந்த ராமர் ஆகிய இரு உறுப்பினர்களும் இருக்கைகளில் அமராமல் முன்னால் நின்று கொண்டே இருந்தனர். அவர்களை இருக்கையில் அமருமாறு மேயர் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அவர்கள் மேயருக்கு முன்பாக வந்து சில பிரச்சினைகளை எழுப்பினர். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மந்திரமூர்த்தி வலியுறுத்தினார்.
அதுபோல தனது வார்டு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்துக்கான கல்வெட்டில் அமைச்சர் மதன்ராஜா பெயரை சேர்க்க வேண்டும் என ராமர் வலியுறுத்தினார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் எழுந்து முன்னால் வந்து அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி குறுக்கிட்டு ஆவேசமாக பேசியது: “புதிய பேருந்து நிலைய விரிவாக்க திட்டம் நாங்கள் வகுத்தது. கடந்த 2 ஆண்டுகளாகவே அதற்கு நிதி கோரியுள்ளோம். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது திமுக அரசின் திட்டம். எனவே, இந்த அரசுக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்ற முடியாது.
அதுபோல நியாயவிலைக் கடை கட்டிடம் ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ சண்முகையாவின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. அமைச்சர் மதன்ராஜா எந்த வளர்ச்சி பணிக்கும் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. எனவே, அவரது பெயரை நிச்சமாக கல்வெட்டில் போட முடியாது.
தவெகவினர் மிரட்டல்:
தூத்துக்குடி நகரம் வரலாற்று வளர்ச்சியை பெறும் வகையில் இன்னும் 10 ஆண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்கியுள்ளோம். இந்த திட்டங்களை யார் வந்தாலும் மாற்ற முடியாது. தூத்துக்குடியின் அமைப்பை மாற்ற முடியாது.
தூத்துக்குடியில் பணிகளை தங்களுக்கு தான் வழங்க வேண்டும் எனக் கூறி தவெகவினர் அமைச்சர் பெயரை சொல்லி அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக நானே முன்னின்று காவல் துறையில் புகார் அளிக்கவுள்ளேன். எனவே, மக்களுக்கான எங்கள் பணியை யாராலும் தடுக்க முடியாது. அது தொடரும்” என்றார் மேயர்.
இதையடுத்து தவெகவில் இணைந்த 2 உறுப்பினர்களும் மேயர் மற்றும் திமுக உறுப்பினர்களை கண்டித்து கோஷம் எழுப்பிக் கொண்டே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து சாதாரண கூட்ட பொருளில் இருந்த 16 தீர்மானங்களும், தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள சமுதாய நலகூடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் மேயரின் சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினர். அதற்கு மேயர் மற்றும் ஆணையர் பதிலளித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.