தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அதிகாரிகள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதாக அரசு தகவல்

உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல்
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த பரிந்துரையின் பேரில் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான துறைரீதியான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை பீபி குளத்தைச் சேர்ந்த கதிரேசன் உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைகள் மீதான நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைச் செயலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் 17 காவல் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், அப்போதைய ஆட்சியர் என்.வெங்கடேஷ், ஐஜி ஷைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சர்கார் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அதன் மீதான மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது. மாவட்ட எஸ்பி மகேந்திரனுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதுதொடர்பாக விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி சாமுண்டீஸ்வரி நியமிக்கப்பட்டார். டிஎஸ்பி லிங்கதிருமாறன், காவல் ஆய்வாளர்கள் ஹரிகரன், பார்த்திபன் ஆகியோர் அரசின் துறைரீதியான நடவடிக்கைக்கு விளக்கம் அளித்துள்ளனர். அதன் மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

காவல் ஆய்வாளர் திருமலை, தலைமைக் காவலர்கள் சங்கர், சதீஷ்குமார், சுடலைக்கண்ணு, கண்ணன், இரண்டாம் நிலைக் காவலர் ராஜா, தாண்டவமூர்த்தி ஆகியோர் மீதான துறைரீதியான நடவடிக்கையின் வாய்மொழி விசாரணை முடிவடைந்துள்ளது. சார்பு ஆய்வாளர் சொர்ணமணி ஓய்வு பெற்றுவிட்டதால் துறைரீதியான நடவடிக்கைக் கைவிடப்பட்டது. சார்பு ஆய்வாளர் ரென்னிஸூக்கு எச்சரிக்கை தண்டனையும், தலைமைக் காவலர் ராஜாவுக்கு கருப்பு புள்ளி தண்டனையும் வழங்கப்பட்டது.

துணை வட்டாட்சியர் சேகர், மண்டல கலால் அலுவலர் சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூவரும் அந்த நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தடையாணை பெற்றுள்ளனர்.

தமிழக அரசு உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம், அதிக காயமடைந்த 40 பேருக்கு தலா ரூ.5 லட்சம், சிறு காயம் அடைந்த 64 பேருக்கு தலா ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மேலும் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர், காயமடைந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 21 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, காவல் ஆய்வாளர் திருமலை மீது மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. திருமலை மீது ஏற்கெனவே துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டதை மறுபரிசீலனை செய்ய முடியுமா என்பது தொடர்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஈரான் - அமெரிக்கா போர்: 6 மாத நிறைவில் கிட்டிய ‘முடிவு’தான் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in