புதுக்கோட்டை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, "2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ அரசாங்கம் அமையப் போகிறது என்பதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.
இன்று நடைபெறும் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தின் மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தமிழகமும் இணைய வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
வரும் தேர்தலில் பாஜக, அதிமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நாங்கள் காங்கிரஸ் மற்றும் திமுகவை எதிர்கொள்வோம்.
ஒவ்வொரு துறையிலும் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது. நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கம் என்று ஒன்று இருக்குமானால், அது தமிழ்நாட்டில் உள்ள அரசாங்கம்தான். அதேபோல், தனது தேர்தல் அறிக்கையில் மிகக் குறைந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரு அரசும் தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசுதான்.
தனது மகன் உதயநிதியை முதல்வராக்குவதே மு.க. ஸ்டாலினின் ஒரே நோக்கம். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. முதலில் கருணாநிதி, பிறகு ஸ்டாலின், இப்போது உதயநிதி. ஆனால், ஸ்டாலினின் இந்த கனவு நிறைவேறப் போவதில்லை.
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு இயல்பான கூட்டணி. நாங்கள் 1998, 2019, 2021 தேர்தல்களில் ஒன்றாகப் போட்டியிட்டோம்.
என்.டி.ஏ தமிழ் மொழிக்கு எதிரானது என்ற தவறான பிரச்சாரத்தை ஸ்டாலின் செய்து வருகிறார். இன்று, நான் தமிழக மக்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். சமஸ்கிருதத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முன்பே, தமிழில் அந்தத் தேர்வுகளை நடத்தத் தொடங்கியவர் பிரதமர் மோடி.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி தமிழ் ஆய்வு இருக்கையை அமைத்தவர் பிரதமர் மோடி. திருக்குறள் என்ற மாபெரும் நூலை 13 மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்தவர் பிரதமர் மோடி.
திமுக அரசு தமிழ்நாட்டைக் குப்பைக் கிடங்காக மாற்றிவிட்டது. மற்ற மாநிலங்களின் கழிவுகள் தமிழ்நாட்டின் புனித நதிகளில் கொட்டப்படுகின்றன.
தமிழ்நாட்டில் இந்து மத நம்பிக்கைகள் மற்றும் வழிபாடுகளுக்கு தொடர்ச்சியான அவமதிப்பை அவர்கள்(திமுக) செய்து வருகிறார்கள். அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவின்போது தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிடுகின்றனர். இந்து தெய்வ சிலைகள் கரைப்புக்கு தடை விதித்ததற்கு திமுக அரசுதான் பொறுப்பு.
2024 ஆம் ஆண்டு முதல், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் என்டிஏ-வின் தீர்க்கமான வெற்றிப் பயணம் நடைபெற்று வருகிறது. 2024ம் ஆண்டில், மோடி மூன்றாவது முறையாகப் பிரதமரானார். முதல் முறையாக ஒடிசாவில் என்டிஏ அரசாங்கம் அமைந்தது. அதே ஆண்டில், ஆந்திரப் பிரதேசத்திலும் என்டிஏ அரசாங்கம் அமைந்தது.
ஹரியானாவில், மூன்றாவது முறையாகத் தொடர்ச்சியாக என்டிஏ அரசாங்கம் அமைக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் எங்கள் அரசாங்கம் அமைந்தது. பீகாரில், நாங்கள் 'இந்தி' கூட்டணியை முழுமையாகத் துடைத்தெறிந்தோம். இப்போது, தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தின் முறை வந்துவிட்டது" என பேசினார்.