

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளை திறம்பட மேற்கொள்வதில் தமிழக அளவில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதில், 45.36 சதவீத பணிகளை மட்டுமே முடித்து சென்னை கடைசி இடத்தில் உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, எஸ்ஐஆர் பணிகள் நவ. 4-ம் தேதி தொடங்கின. தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடியே 41 லட்சத்து 14,587 வாக்காளர்களில், 6 கோடியே 20 லட்சத்து 80,532 வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (பிஎல்ஓ) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 3 கோடியே 72 லட்சத்து 57,812 படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
எஸ்ஐஆர் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பணிகளை திறம்பட மேற்கொள்ளும் மாவட்டங்களை தேர்தல் ஆணையம் வரிசைப்படுத்தி உள்ளது. அதன்படி, பணிகளை சிறப்பாக மேற்கொள்வதில் (பெறப்பட்ட படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்தது மற்றும் இறப்பு, இரட்டைப் பதிவு, நிரந்தர இடமாற்றம், கண்டறிய முடியாதது, படிவங்களை வாங்க மறுத்தது உட்பட) திருவண்ணாமலை மாவட்டம் 81.86 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
இதேபோல, பெரம்பலூர் 80.74 , கன்னியாகுமரி 77.69, தருமபுரி 76.54, திருச்சி 72.13, அரியலூர் 72.1, தஞ்சாவூர் 69.55, ராணிப்பேட்டை 68.33, விழுப்புரம் 67.81, ராமநாதபுரம் 67.52 சதவீதம் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 50.4சதவீதம் பணிகளை நிறைவு செய்து கோவை 37-வது இடத்திலும், 45.36 சதவீதம் பணிகளை மட்டுமே நிறைவு செய்து சென்னை கடைசி இடத்திலும் உள்ளன.
டிச.4-ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடைமுறையில் உள்ள சவால்களை கருத்தில் கொண்டு இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.