புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்தாண்டு டிச.3-ம் தேதி தீபம் ஏற்றக் கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவிகுமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த 2025 டிச.1-ல் உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஆட்சியர், காவல் ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததற்காக வருத்தம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், அவமதிப்பு நடவடிக்கையை எதிர்த்து அதிகாரிகளும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த மதுரை அமர்வு, அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அதே வேளையில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திருப்பரங்குனம் மலையை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய இடத்தில் தினமும் விளக்கேற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இந்து தர்ம பரிஷத் அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவுடன், அரசின் மனுவையும் இணைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அரசு ஏன் ஜூன் மாதத்தில் மனு தாக்கல் செய்தது என கேள்வி எழுப்பியது.
மேலும், உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்களாக இருந்த இந்தியத் தொல்லியல் துறை, தமிழ்நாடு வக்பு வாரியம், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், தடை கோரும் மனு மீதும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளை எதிர்த்து மாநில அரசு கடந்த ஆண்டு டிசமபரில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்தது. ஆனால், அது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு ஜூன் 11 அன்று உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.