

ராமநாதபுரம்: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு, மாநில சுயாட்சிக்கு விடப்பட்ட சவால்” என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஷாஜஹான் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்.
மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை முழுமையாக பயனாளிகளுக்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை ஆய்வு செய்கிறோம்.
நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 20 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.900 கோடியை விடுவிக்கக் கோரி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவை நானும், நவாஸ்கனி எம்பியும் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஏற்கெனவே இருந்த மாநில அரசும், தற்போதைய அரசும் தொன்றுதொற்று வரக்கூடிய, நல்லிணகத்தை பேணும் வகையிலும், தன்னிடம் இருந்த ஆதாரங்களை திரட்டி வழங்கியும் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை ஒரு தீபம் ஏற்றும் தீர்ப்பாக ஏற்றுக் கொள்ளாமல், மாநில சுயாட்சிக்கு சவால் விடக்கூடிய தீர்ப்பாக பார்க்க வேண்டி இருக்கிறது. வரக்கூடிய நாட்களில் ஜனநாயகத்தை விரும்பக் கூடிய சக்திகள், மாநில சுயாட்சியை விரும்பக்கூடிய சக்திகள் ஒன்று சேர்ந்து இதை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். பேட்டியின்போது நவாஸ் கனி உடனிருந்தார்.