திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
Updated on
2 min read

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் இன்றைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனு இன்று (டிச.4) நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், “திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை. நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம். ஆனால், அதற்குள் உயர் நீதிமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது சட்டவிரோதமானது.

இந்த உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 10 பேருடன் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவர் ஒரு படையையே திரட்டிச் சென்றார். மேலும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயர் நீதிமன்ற வளாக பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை. அவர்களை சட்டம் ஒழுங்கு பணி மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. மேலும், மனுதாரரை பாதுகாப்பதும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணியல்ல.

மனுதாரருக்கு தீபம் ஏற்றுவதைத் தாண்டி மறைமுக உள்நோக்கம் உள்ளது. அவருடைய செயல் கலவரத்தைத் தூண்டும் வகையில் அமைந்தது. அவரால் திரண்ட கூட்டத்தினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் போலீஸ் மீது தாக்குதல் நடந்தது. காவலர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் வாயில்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே மனுதாரர் ராம ரவிக்குமார் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் எவ்வித தடையுமின்றி தீபம் கோயில் நிர்வாகத்தால் ஏற்றப்பட்டது. ஆனால், 100 ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத பழக்கமாக தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டிய அவசியம் என்ன?. இவ்வாறு அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில், “தனி நீதிபதி உரிய விசாரணை நடத்தி தான் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். ஆனால், கோயில் நிர்வாகம், காவல்துறை நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், திடீரென 144 தடை உத்தரவைப் பிறப்பித்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மனுதாரருக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்?. சிஐஎஸ்எஃப் வீரர்களின் அதிகாரம் என்ன?. ஒருவேளை காவல்துறை பாதுகாப்பு தர அனுமதி மறுத்ததால் சிஐஎஸ்எஃப் உதவி நாடப்பட்டதா?” என்று வினவினர். தொடர்ந்து நீதிபதிகள், “மத நல்லிணக்கம் என்பது அனைவருக்குமானது. ஒருவரை எதுவும் செய்யவிடாமல் தடுப்பது மத நல்லிணக்கத்தை பேணுவது ஆகாது. அவரவருக்கு உரிய மத உரிமையை அனுபவிக்க விட வேண்டும். இருதரப்பும் இணைந்து தங்களுக்கு உரிமையானதை செய்து கொள்ள வேண்டும்.” என்று கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ராம ரவிக்குமார் மீதுதான் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் அரசு வாதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in