

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கின் நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு முறையாக பதில் அளிக்காவிட்டால் பிப்.2-ல் அவமதிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுதுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்று மனுதாரர் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுடன் கார்த்திகை தீபம் ஏற்றச் சென்ற மனுதாரர் ராம ரவிக்குமாரை 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக கூறி மலைக்கு அனுமதிக்கவில்லை.
இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோருக்கு எதிராக மனுதாரர்கள் ராம ரவிகுமார், பரமசிவம், சோலை கண்ணன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். தலைமை செயலாளர் முருகானந்தம், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் காணொளி வழியாகவும் ஆஜராகினர்.
அப்போது நீதிபதி, ‘நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஒவ்வொருவரின் தனிப்பட்ட விளக்கம் என்ன?’ என கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பில், ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் உத்தரவை எதிர்த்து தாக்கலான மேல்முறையீடு மனுக்கள் நேற்று இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. நேரமின்மை காரணமாக மனு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை’ எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி, ‘எழுத்துபூர்வமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?’ என்றார். அதற்கு அரசு தரப்பில், ‘அடுத்த விசாரணையின் போது எழுத்துபூர்வமாக பதில் மனு தாக்கல் செய்யப்படும்’ என பதிலளிக்கப்பட்டது.
தொடர்ந்து நீதிபதி, ‘முழுமையாக ஒரு மாதம் அவகாசம் இருந்தும், எழுத்துபூர்வ பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது. தீபத்தூண் அமைந்துள்ள இடம் கோயிலுக்கு சொந்தமானது என்பதை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது.
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு கொடியேற்ற எப்படி அனுமதி வழங்கப்பட்டது? கொடியேற்றியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதில் ஏதேனும் முரண் உள்ளதா? கல்லத்தி மரத்தில் கொடியேற்ற கோயில் தரப்பிடம், தர்கா தரப்பு அனுமதி பெறவில்லை. இதற்கு என்ன செய்யலாம்? நீங்களே பரிந்துரையுங்கள்’ என்றார்.
கோயில் தரப்பில், ‘தர்கா நிர்வாகத்தின் செயல் அத்துமீறல், அனுமதியில்லாமல் கல்லத்தி மரத்தில் கொடியேற்றியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறப்பட்டது.
‘கோயில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டால், அந்தப் புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நீதிபதி கூறினார்.
அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
நீதிபதி, ‘நீதிமன்ற உத்தரவு வேண்டும் என்றே நிறைவேற்ற மறுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுத்தவர்களை அப்படியே விடுவதா?’ என்றார்.
மாவட்ட ஆட்சியர், துணை காவல் ஆணையர் தரப்பில், ‘நாங்கள் சுயமாக முடிவெடுத்து செயல்பட்டோம். எங்களை யாரும் நிர்பந்திக்கவோ, அறிவுறுத்தவோ இல்லை’ எனக் கூறப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘கோயில் செயல் அலுவலரிடம் நீதிமன்ற உத்தரவை நீங்களாகவே அமல்படுத்தவில்லையா அல்லது அமைச்சர் சேகர்பாபு அமல்படுத்தக் கூடாது என்று சொன்னாரா? நீதிமன்ற உத்தரவை அவமதித்தவர்கள் வருத்தம் தெரிவித்தோ, விளக்கம் அளித்தோ இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை’ என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ‘நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் டிசம்பர் 2025 முதல் வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. மீண்டும் 17.12.2025 அன்று பட்டியலிடப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு செய்தவர்களுக்குப் போதுமான வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கைகள் தொடங்கக் கூடாது என்பதற்கான காரணத்தை இப்போது வரை தெரிவிக்கவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என 1.12.2025-ல் பிறப்பித்த உத்தரவை உத்தரவை கோயில் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் 144 தடையாணை பிறப்பித்தார்.
இந்த தடை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்த போதும் துணை ஆணையர் இனிகோ திவ்யன் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதை தடுத்தார். இதற்கு முறையாக விளக்கம் அளிக்கப்படாவிட்டால் 02.02.2026 அன்று நீதிமன்ற உத்தரவை அவமதித்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். விசாரணை 02.02.2026-க்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.