

சென்னை: எஸ்ஐஆர் என்ற பெயரில் சட்டவிரோத மாற்றங்கள் நடந்துள்ளதால் தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாக பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிர திருத்தம்’ நடவடிக்கைகளின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
13 கோடி வாக்காளர்களின் பெயர்களை பாதிக்கும் வகையில் அங்கீகாரமற்ற, சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் படிவம் 6-ல் ஆட்சேபனைகள் எழுந்துள்ளது.
தொழில்நுட்பப் பிரிவுகள் மூலம் வாக்காளர் பட்டியல் தரவுத்தளம் மையப்படுத்தப்பட்டு, கள அளவில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் முடிவுகளை மீறி, தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
கோவாவில் ஏற்பட்ட மென்பொருள் பிரச்சினைகளால் உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், தகுதியுடைய 97 பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளனர்.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமாக முன்வந்து உடனடியாக பதவி விலக வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து எஸ்ஐஆர் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
மக்களின் வாக்குரிமையையும், தேர்தல் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.