

கோப்புப் படம்
வேலூர் விஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநர் மாளிகைக்கு இதுவரை ராஜ்பவன் என்று இருந்த பெயரை இப்போது "லோக் பவன்', அதாவது "மக்கள் மாளிகை' என மாற்றம் செய்திருப்பதை வரவேற்கிறோம்.
தவெக தலைவர் விஜயை கண்டு திமுக அச்சப்படுவதாக எழுப்பப்படும் கேள்வியே ஒரு சார்பு உடையதாக உள்ளது. விஜயை பார்த்து திமுக பயப்படுவதாக தாங்களாக முடிவு செய்து கொள்ளக் கூடாது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு எந்த அச்சமும் இல்லை. முதன்முதலில் விஜய் அரசியலுக்கு வந்ததை வாழ்த்தி வரவேற்ற இயக்கம் விசிக. ஆனால், அவர் இதுவரை கொள்கை சார்ந்த அரசியல் பேசாமல், வெறுப்பு அரசியலை உயர்த்திப் பிடிக்கிறார். உடனடியாக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் எனும் வேட்கையுடன், ஆளும் கட்சியை விமர்சிப்பது என்பதை கடந்து வெறுப்பை உமிழ்ந்து கொண்டுள்ளார்.
விசிக இதுவரை தனிநபர் விமர்சனம் எதையும் செய்தது இல்லை. அந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்ததும் இல்லை. அவர்கள் முன் வைக்கக்கூடியது கொள்கை சார்ந்த அரசியலாக இல்லாமல் ஆளும் கட்சிக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதாக இருக்கிறது என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். வேலூர் மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளை வரும் தேர்தலில் பெற முயற்சி செய்யப்படுமா என கேட்கிறீர்கள்.
ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட தொகுதிகளை எழுதித் தருகிறோம். கூட்டணி பேச்சுவார்த்தையில் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு உடன்படிக்கை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும்.எஸ்ஐஆர் வேண்டாம் என்பதுதான் எங்கள் முழுநோக்கம். அதேநேரம், நீட்டிப்பு செய்திருப்பதை இயற்கை சூழலை கருத்தில் கொண்டு பார்க்கிறேன்.’’ என்றார்.