

திருமாவளவன்
அரியலூர்: தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை இன்று மக்கள் தீர்ப்பாக எழுத உள்ளனர். திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும் என விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் அங்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக தலைமையிலான கூட்டணி பொதுமக்களின் ஏகோபித்த நல்ல ஆதரவுடன் மகத்தான வெற்றியை பெரும்.
200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும். அறுதி பெரும்பான்மையுடன் திமுக தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை இன்று மக்கள் தீர்ப்பாக எழுத உள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போல் இரு கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல. இரு அணிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல. இரண்டு கருத்தியல்களுக்கு எதிரான யுத்தமே இந்த தேர்தல். அந்த யுத்தத்தில் தமிழ்நாடு வெல்லும். மீண்டும் ஸ்டாலின் முன்மாதிரி ஆட்சி அமையும். சமூகநீதி தலைத்தோங்கும்.
கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் என்பது வெறும் யூகங்கள். தேர்தல் நேர பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே இது போன்ற முரண்பாடுகள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பான ஒன்று.
கூட்டணியை இது எந்த வகையிலும் பாதிக்காது. ஒரே அணியாக நின்று நாங்கள் களமாடுகிறோம். கட்டுக்கோப்பான கூட்டணி, பலம் வாய்ந்த கூட்டணி, கொள்கை சார்ந்த கூட்டணி என்ற நன்மதிப்பு பொதுமக்களிடையே உள்ளது. 5 ஆண்டுகளில் தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக பெண்களை மையப்படுத்தி மேம்படுத்த புதுமைப் பெண், உரிமைத் தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட பெண்களை வலிமைப்படுத்தும் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் வெற்றி மேலும் பலத்தை எங்களது கூட்டணிக்கு தந்துள்ளது. அதே வேளையில் எதிரணியிடம் உண்மையில் ஒருங்கிணைப்பு இல்லை. ஒற்றுமை இல்லை. சமூகத்தில் நன்மதிப்பு இல்லை. அவர்கள் சந்தர்ப்பவாத அடிப்படையில் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தாத கூட்டணி அமைத்துள்ளனர் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
நடிகர் விஜய் திமுக வெறுப்பை மட்டுமே மூலதனம் ஆக்கி, திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பரப்புரையை மட்டுமே மேற்கொண்டார். அவருடைய எதிர்கால திட்டங்கள் குறித்து, கொள்கை கோட்பாடுகள் குறித்து, அவர் ஒரு நாளும் பேசியதில்லை. அவர் வெளிப்படுத்திய திமுக வெறுப்பு உள்நோக்கம் கொண்டது என்பதை மக்கள் உணர்ந்து இருக்கின்றார்கள். எங்கும் அவருடைய அடையாளங்கள் பெரிதாக இல்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளை விடவும் சிறப்பாக வரும் காலத்தில் திமுக ஆட்சி இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றில் இந்தியாவில் முதல் மாநிலம் என்ற ஒரு எல்லையை தொட்டது. அது மட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் 11.9 சதவீதம் உள்ளூர் உற்பத்தி சதவீதத்தை உயர்த்த கூடிய அளவில் பொருளாதாரம் இந்திய அளவில் உயர்ந்து இருந்தது.
அப்படிப்பட்ட வளர்ச்சியை நாம் மேலும் உறுதிப்படுத்துவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தொலைநோக்கு பார்வை அவருக்கு உள்ளது. எனவே, அடுத்த ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும் தளங்களிலும் கொண்டு செல்ல பாடுபடுவார். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” இவ்வாறு அவர் கூறினார்.