பனையூர் பாபு | கோப்புப் படம்
சென்னை: விசிகவில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுவதாக தெரிவித்துள்ள விசிக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பனையூர் பாபு, திருமாவளவன் தடம்மாறத் தயாராகி விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும், செய்யூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பனையூர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விசிக தலைவர் திருமாவளவனின் பங்கு அளப்பரியது.
ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அவர். அம்பேத்கரின் "கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்" என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு, சாதி வெறி, மத வெறி சக்திகளை அடையாளம் கண்டு அவர்களைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியல் களத்திலேயே அவருக்கு நிகர் யாருமில்லை என்றுதான் நான் முழுமையாக நம்பினேன்.
ஆனால், அந்த அடிப்படை அரசியல் அறம் தடம் மாறும் போது என்னால் மவுனமாகக் கடந்து செல்ல முடியவில்லை. மிகுந்த மனவேதனையோடு ஒரு யதார்த்தத்தை இங்கு பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.
சமீப காலங்களாகத் தலைமையின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்குப் பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன. ஒரு தெளிவான நிலைப்பாடின்றி, அடிக்கடி தடுமாறுவது அவரது இயல்பல்ல. நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு, மீண்டும் இரவில் சமூக வலைத்தள நேரலையில் (Facebook Live) முற்றிலும் முரணான ஒரு நிலைப்பாடு எனத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, அரசியல் களத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது.
நேற்று வரை ஒரு நடிகரை 'ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி பெற்றெடுத்த பிள்ளை' என்று கடுமையாக விமர்சித்த அவர், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம்மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
"விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள்" என்று சூளுரைத்த அவர், இன்று அவர்களுடனே கைகோக்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும்.
ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும்; அது நிலையற்றது. ஆனால், பெரியாரும் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்த கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள். அரசியல் தளத்தில், "மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது" என்று புரட்சியாளர் அம்பேத்கர் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் இன்று அந்த அபாயகரமான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமோ என அஞ்சுகிறேன்.
கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன் என்ற எனது முடிவைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கட்சியிலிருந்து விலகினாலும், திருமாவளவனிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட கொள்கைகளிலும், கருத்தியலிலும் இம்மியளவும் பின்வாங்காமல் உறுதியாக நின்று பயணிப்பேன். அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான எனது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.