

சென்னை: தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிப்பது குறித்து விசிக நிலைப்பாட்டை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்ததாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததால் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவை அக்கட்சி கோரியது.காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், தற்போது விசிகவும் ஆதரவு அளித்துள்ளது.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் நேற்று பேசிய திருமாவளவன், ‘‘அரசியல் நெருக்கடி உருவாகியுள்ள சூழலில் இடதுசாரி கட்சிகளும் விசிகவும் தவெக ஆதரித்துள்ளோம். அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி குடியரசுத்தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நிலையிலும் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க விசிகநிலைப்பாடு தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்திலும், வெளியிலிருந்து விசிக ஆதரவு வழங்குவது எனவும் முடிவு செய்துள்ளோம்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிக தொடரும். அரசியல்கட்சிக்கென இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி இந்த முடிவை எடுத்துள்ளோம். இதனால் எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முறைப்படி எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். அதனை அவரும் ஏற்றுக்கொண்டார்.
தவெக ஆட்சியமைப்பதற் கான 118 இடங்கள் அவர்களிடம் உள்ளது. எனவே விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்து, ஜனநாயகத்தை காக்க வேண்டும். குதிரை பேரம் நடப்பதற்கு இடம் கொடுக்கக் கூடாது’’ என்றார். இதையடுத்து செல்போனில் திருமாவளவனை தொடர்பு கொண்டு விஜய் பேசியதாகக் கூறப்படுகிறது.
பதவி கேட்பதாக பொய் செய்தி: விசிக எம்பி ரவிக்குமார் கூறும்போது, ‘‘விசிக சார்பில் தவெகவிடம் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன்போக வேண்டாம்’’ என்றார்.
ஐயுஎம்எல் ஆதரவு: இதற்கிடையே, தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து ஐயுஎம்எல் கட்சியும் கடிதம் வழங்கியது. விசிக, ஐயுஎம்எல் ஆதரவு தெரிவித்ததையடுத்து தவெகவின் பலம் 120 ஆக அதிகரித் துள்ளது.