

விசிக தலைவர் திருமாவளவன்
அதிமுக-பாஜக ஆட்சியை அமர்த்துவதுதான் விஜய்யின் ஒரே நோக்கமாக இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று சென்னையில் வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தி திணிக்காத இருமொழிக் கொள்கை, கடலும் காடும் கனிமமும் நமதே, விலையில்லாத கல்வியைப் பெறுவோம், மருத்துவத்தை அடிப்படை உரிமையாய் ஆக்குவோம், மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு, மகளிருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, தனியார் துறையிலும் சமூக நீதி, உழுபவருக்கு நிலம் இருப்பவருக்கு இடம், சிறுபான்மையினரைக் காக்க சிறப்புச் சட்டம், காவல் துறை சிறைத் துறை சீர்திருத்த பாடுபடுவோம், மது, போதைப்பொருட்களை ஒழிப்போம், ஆணவக் கொலைகளைத் தடுத்திட சிறப்புச் சட்டம் இயற்றிட வியூகம் அமைத்து போராடுவோம் என 12 கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கொள்கை அறிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படவில்லை, பாஜக கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என்ற இரு முனைப் போட்டிதான்.திமுகவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக விஜய் வேலை செய்கிறார். அவரால் ஆட்சி வர முடியாது என்று தெரிந்தும், அவர் திமுக அகற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அதிமுக-பாஜக ஆட்சியை அமர்த்துவதுதான் அவரின் ஒரே நோக்கமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.