“திமுக கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது” - திருமா கருத்து

திருமாவளவன் | கோப்புப் படம்
திருமாவளவன் | கோப்புப் படம்
Updated on
1 min read

ஓபிஎஸ் சேர்ந்ததன் மூலம் திமுக கூட்டணி வலுவடைந்துள்ளது. என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதியம் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மதுரைக்கு சென்றார். முன்னதாக, சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததன் மூலம் மதச்சார்பற்ற கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது. அவர் முதல்வராக பணியாற்றியவர்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். அதிமுகவை ஒருங்கிணைத்து, ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பியதை நாடு அறியும். ஆனால் அவர் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் பாஜக போன்ற கட்சிகளில் சேராமல், மீண்டும் தன்னை, திராவிட பாசறையில் இணைத்து கொண்டது, அவர் மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது.

அவர் பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார். பாஜக சொல்படி செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள், அவர் மீது இருந்தன. ஆனால் அவர் எடுத்துள்ள முடிவு, அவர் நிதானமானவர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் வழி வந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணி எங்களை பேச்சு வார்த்தைக்கு 28-ம் தேதி அழைத்தனர். அன்று நான் ஊரில் இல்லை. எனவே வருகின்ற மார்ச் 2-ம் தேதி சந்திக்கலாம் என்று கூறியிருக்கின்றனர். எனது தலைமையில் 2 அல்லது 3 பேர் அந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வோம். அதற்கு தனியாக நாங்கள் குழு அமைக்கவில்லை. திமுக கூட்டணி மெகா கூட்டணி. நிறைய கட்சிகள் இணைந்து கொண்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்து, அந்தந்த கட்சிகளின் வலிமைக்கு ஏற்ப முதல்வர் இடங்களை வழங்குவார்.

காங்கிரஸ் தேசிய கட்சி. கூட்டணி குறித்து இறுதி முடிவு டெல்லியில் தான் எடுப்பார்கள். டெல்லியில் இருந்து ஏதாவது தகவல் வந்தால், அதற்கு நாம் பதில் கூறலாம். அது தவிர இங்கு உள்ளவர்கள் மாற்று கருத்துகளை, காங்கிரசில் கூறுவது வழக்கம். அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு பதில் கூற முடியாது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருமாவளவன் | கோப்புப் படம்
முடிந்தது தர்மயுத்தம்... முட்டுச் சந்தில் ஓபிஎஸ்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in