

மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது: அரசியலில் வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தி வருவது கவலை அளிக்கிறது. தேர்தல் அரசியலில் கூட்டணி தொடர்பாக நான் எடுத்த முடிவுகளை சிலர் வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர். திமுக மீது எங்களுக்கும் விமர்சனம் உண்டு. நீங்கள் திமுகவை உயர்த்தி பிடிக்கிறீர்கள் என சிலர் குறை கூறுகின்றனர். தேர்தல் களத்தில் நின்று மக்களுக்கு உண்மையாகவும், ஏற்றகொள்கைக்கு பாதிப்பு ஏற்படாமலும், இயக்கம் வலிமையோடு செயல்படுவதற்கேற்ற முடிவு எடுக்கும் நிலை உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தாலும் திமுக அரசை கண்டித்து விசிக நடத்திய போராட்டங்களைபோல் எந்த கட்சியினரும் நடத்தியிருக்க முடியாது. மதுரையில் நான் அரசை கண்டித்து பேசியது தொடர்பாக, தமிழக முதல்வரே ஏன் பொதுவெளியில் அரசை குற்றம் சுமத்தி பேசுகிறீர்கள் என என்னிடம் கூறி வருத்தப்பட்டார்.
தற்போது மதுரையை குறிவைத்து சனாதன நகரமாக மாற்றப் பார்க்கிறார்கள். எனக்கு பதவி ஆசை, பொருள் ஆசை இல்லை. இடதுசாரிகள் முற்போக்கு சக்திகளாக இருப்பதால் எந்த ஆதாயமுமின்றி இணைந்திருக்கிறோம். உண்மையான தமிழ் தேசியம் என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.