

திருமாவளவன்
திருச்சி: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்றும், எந்தத் தொகுதி இடைத்தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது தமிழக அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல. எந்தப் பின்னணியில் இதை அவர்கள் செய்கிறார்கள் எனத் தெரியாது. அதிமுகவின் உள்கட்சி விவகாரமாகவும் இதை கடந்து செல்ல முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திடீர் திடீரென பதவி விலகுவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.
கூட்டணிக் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லாமல் தவெகவினர் அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கிறார்களா என்ற யூகத்துக்கு பதில் சொல்ல முடியாது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் என்னை சந்தித்து ஜூலை 1-ம் தேதி நடைபெறும் தேனீர் விருந்து போன்ற கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதுதவெக கூட்டணிக்கு முழுமையான வடிவம் கொடுக்கும் கூட்டமாக இருக்கலாம். கரூர் துயரச் சம்பவத்துக்கு பிறகு முதல்வர் என்ற அடிப்படையில் விஜய் அங்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் உள்ளது. அவர் அங்கே செல்வது அவசியமானது. எந்த தொகுதி இடைத்தேர்தலிலும் நான் போட்டியிடப்போவதில்லை.
இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றோ, அமைச்சரவையில் இலாகா கேட்டோ அழுத்தமும் தரவில்லை. அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியது உண்மையாக இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.