பருத்தி துணியில் திருக்குறள் புத்தகம் - கரூர் நெசவாளரின் புதுமைப் படைப்பு

பருத்தி துணியில் திருக்குறள் புத்தகம் - கரூர் நெசவாளரின் புதுமைப் படைப்பு
Updated on: 
1 min read

கரூர்: பருத்தித் துணியில் நெய்யப்பட்ட 133 பக்கங்கள் கொண்ட திருக்குறள் புத்தகத்தை கரூர் மாவட்ட நெசவாளர் ஒருவர் உருவாக்கி அசத்தியுள்ளார்.

கரூர் மாவட்டம் இளவனூரைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளரான பிரபு, பருத்தித் துணியால் நெய்யப்பட்ட 133 பக்கங்கள் கொண்ட திருக்குறள் புத்தகத்தை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “பருத்தித் துணியால் நெய்யப்பட்ட திருக்குறள் புத்தகம் இது. இந்த புத்தகத்தை உருவாக்க எனக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. ஏற்கெனவே, பருத்தித் துணியில் திருவள்ளுவரின் உருவத்தை நான் நெய்திருந்தேன். அதனால், துணியிலேயே ஒரு திருக்குறள் புத்தகத்தை உருவாக்கலாம் என முடிவு செய்தேன்.

இதற்கான துணியை சந்தையில் வாங்குவதற்குப் பதிலாக, எங்கள் விசைத்தறியிலேயே அதை நெய்ய நான் முடிவு செய்தேன். இதற்காக தூய பருத்தி நூலை நான் பயன்படுத்தினேன். பின்னர் அந்த துணி வெட்டப்பட்டு, அதில் தமிழ் குறட்பாக்கள் மேனுவல் ஸ்கிரீன் பிரின்டிங் முறையில் அச்சிடப்பட்டன.

ஒவ்வொரு பக்கத்திலும் திருக்குறளின் அதிகாரங்களில் உள்ள 10 குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தோல் அட்டையைக் கொண்டு புத்தகம் பைண்டிங் செய்யப்பட்டது. இவ்வாறு நாங்கள் மூன்று புத்தகங்களை உருவாக்கி உள்ளோம். மேலும், 7 புத்தகங்கள் பைண்டிங் செய்ய தயாராக உள்ளன.

ஒரு புத்தகத்தை உருவாக்க சுமார் ரூ.25,000 செலவானது. இதுபோன்று பருத்தித் துணியில் திருக்குறள் புத்தகம் தயாரித்திருப்பது இதுவே முதல்முறை. எங்கள் முயற்சிக்கு வரவேற்பு அதிகரித்து அதிக ஆர்டர்கள் கிடைக்கும்போது செலவை குறைக்க முடியும்” என தெரிவித்தார்.

புதுமையான முறையில் திருக்குறள் புத்தகத்தை தயாரிப்பதற்கான யோசனை எவ்வாறு எழுந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரபு, “என் தாத்தாவும், அப்பாவும் நெசவாளர்களாக இருந்தார்கள். இதனால், சிறுவயது முதலே நான் நெசவுத் தொழில் செய்து வருகிறேன். புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், பல்வேறு யோசனைகளைச் செயல்படுத்திப் பார்க்கவும் நான் விரும்புவேன். அப்படித்தான் இந்த யோசனை வந்தது. முதல்வர் விஜய்யைச் சந்தித்து அவருக்கு ஒரு புத்தகத்தை பரிசளிக்க விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

பருத்தி துணியில் திருக்குறள் புத்தகம் - கரூர் நெசவாளரின் புதுமைப் படைப்பு
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அக்.4-ல் மும்பையில் பேரணி: தாக்கரே சகோதரர்கள் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in