

வேலூர்: “கூட்டணிக்கு சென்றால் பணம், துணை முதல்வர் பதவி கொடுக்கிறேன் என்றார்கள். நாங்கள் ஏன் போகவில்லை? இவர்களை ஒழிக்காமல் ஊழல், லஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியும்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளார் சீமான் இன்று வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேலூர் மண்டி தெருவில் அவர் பேசும்போது, “ஒரு நாடு தன் மக்களுக்கு கல்வியையும், மருத்துவத்தையும் சமமாக வழங்க பாடுபட வேண்டும். அப்போதுதான் அந்த நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என்று பொருள்.
ஆனால், இங்கு கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு, விற்பனை பண்டமாக மாற்றி விட்டனர். அரசு பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் நிலையும், அரசை நடத்துபவர்களுக்கே உடல்நிலை சரியில்லை என்றால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையும்தான் உள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவ துறைக்கு சுமார் ரூ.22 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டாலும், மருத்துவத்தின் தரம் மட்டும் உயரவில்லை. விவசாயிகள் பாடுபட்டு விளைவிக்கும் நெல்லை கொள்முதல் செய்து பாதுகாக்க கிடங்குகள் இல்லை. ஆனால், டாஸ்மாக் மதுபானங்களை குளிரூட்டப்பட்ட அறைகள், வாயிலில் காவலாளிகள், சிசிடிவி கேமராக்களுடன் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன.
தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்குவதன் மூலம், அரசுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. ஆனால், மின் உற்பத்தியில் அரசு முதலீடு செய்யவில்லை. காரணம், வாங்குவதில்தான் இவர்களுக்கு லாபம் இருக்கிறது. அரசுக்கு ரூ.10.5 லட்சம் கோடிக்கு கடன் இருந்தும், தரமான கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம் வழங்கப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிவிட்டு சுமார் 70 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம் என முதல்வர் சட்டப்பேரவையில் பெருமை பேசுகிறார். ஆனால், போராட வேண்டிய ஒரு லட்சம் பிரச்சினைகளை உருவாக்கியது ஆட்சியாளர்களின் கொடுமையே தவிர பெருமைப்பட ஒன்றும் இல்லை. மாறி, மாறி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, டாஸ்மாக் வியாபாரம் என ஆட்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை.
ஆறுகளில் நீர் இல்லை, இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இலவச மின்சாரம் என்ற பெயரில் தடையில்லா மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா? கடந்த 60 ஆண்டுகளாக இவர்களை நம்பி ஏமாந்து வருகிறோம். இந்த தேர்தலையும் வழக்கம்போல் வாக்கு போட்டுவிட்டு கடந்து செல்லாமல், மக்கள் தங்கள் கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்.
தமிழ் சமூகம் விழித்துக்கொள்ள வேண்டும். விழிப்புணர்வே விடுதலையின் முதல்படி என்கிறார் எங்களின் தலைவர். விழிப்புணர்வற்ற சமூகத்தில் நடிப்பவர்களுக்கே முதலிடம் என்கிறார் இறையன்பு. எங்களுக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று உங்கள் மகன் கேட்கவில்லை.
இத்தனை ஆண்டு காலம் செலுத்தி பார்த்துவிட்டீர்கள். மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 5 ஆண்டுகள் வாழ்ந்து விட்டீர்கள். அவரது அப்பாவின் ஆட்சியில் பலமுறை வாழ்ந்து விட்டீர்கள். ஜெயலலிதா ஆட்சியிலும் வாழ்ந்து விட்டீர்கள். அவர் வழியில் வந்த பழனிசாமி ஆட்சியில் வாழ்ந்து விட்டீர்கள். ஒரே ஒருமுறை உங்கள் பிள்ளைகளுக்கு வாக்களியுங்கள்.
இந்த நாட்டில் தலை சிறந்த ஆட்சியை கொடுக்காவிட்டால் மரத்தில் கட்டி வைத்து அடியுங்கள். கூட்டணிக்கு சென்றால் பணம், துணை முதல்வர் பதவி கொடுக்கிறேன் என்றார்கள். நாங்கள் ஏன் போகவில்லை? இவர்களை ஒழிக்காமல் ஊழல், லஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியும்? இந்த பிள்ளைகள் எடுத்து வைக்கும் கருத்துகள் சரியாக இருந்தால் எங்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். இல்லையென்றால், அந்த சனியன்களை கட்டிப் பிடித்து அழுங்கள்” என்றார் சீமான்.