‘பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுகவுடன் கூட்டணி!’ - தேமுதிகவை தாக்கும் நயினார் நாகேந்திரன்

‘பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுகவுடன் கூட்டணி!’ - தேமுதிகவை தாக்கும் நயினார் நாகேந்திரன்
Updated on
2 min read

திருச்சி: “பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் இன்று காலை திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தர உள்ளார்.

அன்றைய தினம் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது அதற்காக இடம் தேர்வு செய்ய உள்ளோம். இடம் தேர்வு செய்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து எந்த இடத்தில் பொதுக்கூட்டம் வைப்பது என்பது தொடர்பான இறுதி முடிவை அறிவிப்போம். 200 இடங்களில் திமுக வெற்றி பெறுவோம் என்கிறார்கள். ஆனால் 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எவ்வளவு சதவீதம் நிறைவேற்றி உள்ளது என்பதை திமுக தலைவர்கள் மாற்றி மாற்றி கருத்து கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் 90% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஏற்கெனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்தது போல், மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை திமுக அரசு கொடுக்க தொடங்கியுள்ளது. இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம் ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கொங்கு பகுதிகளில் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லை.

பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது, திமுக கூட்டணி வலுவிழந்து உள்ளது. இந்த நிலையில்தான் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள்.

நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஓபிஎஸ் மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். திமுக அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்குகள் உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துக்குள் நாங்கள் செல்லவில்லை.

தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. அனைத்து நிதிகளையும் பெற்றுக்கொண்டு, நிதி கொடுக்கவில்லை என தமிழக அரசு கூறுகிறது.

ஆண்டுதோறும் ரூபாய் ஆயிரம் கோடி பேரிடருக்கான நிதியாக ஒதுக்கப்படுகிறது. கல்விக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு கொண்டுதான் உள்ளது. ஆதி திராவிடர் நலத் துறைக்கு கொடுக்கும் நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது.” என்றார்.

பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு கூட்டணியில் சேர்கிறார்கள் என யாரை குறிப்பிடுகிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு சென்றார்.

அதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரன், திருச்சி பஞ்சப்பூர், பொன்மலை ஜி கார்னர், மன்னார்புரம் ராணுவ மைதானம், மாத்தூர் ரிங் ரோடு ஆகிய இடங்களை பார்வையிட்டார். இவற்றில் ஒரு இடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது.

‘பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுகவுடன் கூட்டணி!’ - தேமுதிகவை தாக்கும் நயினார் நாகேந்திரன்
‘டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி’ - உளவுத் துறை எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in