

மேட்டுப்பாளையம் அருகே சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கிய வைகோ
கோவை: “தவெக ஆட்சியை கவிழ்த்துவிட வெறி கொண்டு அலைகிறார்கள்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளேபாளையம் கிராமப் பகுதியில், மதிமுக சார்பில், சீமைக் கருவேல மரங்களை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (ஜூலை 7) நடைபெற்றது. மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ சுனில் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றி பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: “யாருக்கோ தேள் கொட்டியது போல, எப்படி இந்த ஆட்சி இருப்பது என தவிக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் எங்கள் சொத்து எனது காலம் எனது பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் காலம் என தங்களிடமே இருக்க வேண்டும் என கருதுகிறார்கள்.
எப்படியாவது தவெக ஆட்சியை கவிழ்த்து விட வெறி கொண்டு அலைகிறார்கள். இதற்கு மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரிடம் உதவி கோருகிறார்கள். சட்டப்பிரிவை 356-ஐ பயன்படுத்த வேண்டும் என திராவிட கொள்கைக்கு எதிராக மனசாட்சி இல்லாமல் வலியுறுத்துகிறார்கள்.
இந்த ஆட்சியை கவிழ்க்க இயலாது. கவிழ்ந்தாலும் அடுத்து வரும் தேர்தலில் 180 இடங்களுக்கு மேல் விஜய் வெற்றி பெறுவார். நான் தற்போது தவெக கூட்டணியில் இருக்கிறேன். இந்த ஆட்சியில் குறைகள் தெரிந்தால் தொடர்புடைய அமைச்சரிடம் பேசுவேன் அல்லது முதல்வரை தொடர்புகொண்டு பேசுவேன். சாலையில் பேச மாட்டேன்.
நியாயமே இல்லாமல் அரசியல் தற்கொலைக்கு சமமாக, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வராக்க முயற்சித்தார்கள். ஏனென்றால் கஜானா மூடப்பட்டுவிட்டது. பல ஆயிரம் கோடிகள் வருவாய் தந்த கருவூலம் மூடப்பட்டுவிட்டது” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சீமை கருவேல மரங்கள் அறுவை இயந்திரம் மற்றும் பொக்கலைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில், மதிமுக கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.டி.ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.