கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடமில்லை: ரங்கசாமியின் திடீர் நிபந்தனையால் திகிலான பாஜக

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Updated on
1 min read

என்டிஏ உடன் கூட்டணியை தொடர்வதாக கடந்த மாதமே அறிவித்துவிட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, “புதிய கட்சிகளுக்கு கூட்டணியில் இடமில்லை” என இப்போது போட்டிருக்கும் திடீர் நிபந்தனையால் பாஜக தலைமை கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பலமுறை முயன்றும், முதல்வர் ரங்கசாமி இன்னமும் பிடிகொடுக்காமல் இழுக்கிறார். இந்தக் கூட்டணியில் தாங்களும் இருப்பதாக அதிமுக தான் சொல்கிறதே தவிர பாஜக-வால் இன்னும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நடத்தும் கூட்டங்களுக்கு அதிமுக-வை சேர்க்காமலேயே இருக்கிறார்கள்.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கி இருக்கும் லஜக-வும் என்டிஏ-யில் இணைய பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த நிலையில் தான், “கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடமில்லை” என்று திடீர் நிபந்தனையை விதித்திருக்கிறார் ரங்கசாமி.

இதுபற்றி என்டிஏ தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “கடந்த தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இருந்த கட்சிகள் மட்டும்தான் கூட்டணியில் தொடர வேண்டும் என்று ரங்கசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார். புதிய கட்சிகளை இணைக்க அவர் விரும்ப வில்லை. பாஜக தரப்பில் இதற்கு விளக்கம் தராததால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தள்ளிப் போகிறது. இதனால் வழக்கம் போல் இம்முறையும் ரங்கசாமி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை கடைசி நிமிடம் வரைக்கும் இழுக்க வாய்ப்பிருக்கிறது” என்றனர்.

இதேபோல் இண்டியா கூட்டணியிலும் நிச்சயமற்ற நிலைமையே தொடர்கிறது. இம்முறை அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும் என்பதில் திமுக-வும் காங்கிரஸும் விடாப்பிடியாக இருக்கின்றன. கூட்டணிக்கு யார் தலைமை என்பதிலும் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.

இதனிடையே புதுச்சேரி வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “தமிழகத்தில் காங்கிரஸ் குறைவான தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள சம்மதித்ததைப் போல புதுச்சேரியில் திமுக குறைவான தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்திச் சென்றுள்ளார்.

கடந்த முறை காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்ற 8 தொகுதிகளை தவிர, மற்ற 22 தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதை ஏற்காத திமுக, காங்கிரஸ் அழைத்தும் இன்னும் பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் இருக்கிறது. இதனிடையே, கார்கேயிடம் பேசி இந்தப் பஞ்சாயத்தை சுமுகமாக முடிப்பதற்காக புதுச்சேரி காங்கிரஸார் டெல்லிக்குப் பயணமாகி இருக்கிறார்கள்.

<div class="paragraphs"><p>புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி </p></div>
விசிகவை ஒழிக்க கங்கணம் கட்டும் பட்டியலின அமைச்சர்கள்: மாணவரணி துணைச் செயலாளர் ஆதங்கப் பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in