

திருமாவளவன் | கோப்புப் படம்
மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடந்த விழா ஒன்றில் பங்கேற்று திருமாவளவன் பேசியதாவது: சாதி மறுப்பது, மறுமணம் செய்வது 50 ஆண்டுகளுக்கு முன்பு கடினமான செயலாக இருந்தது. இன்றைக்குப் பொது வெளியில் ஊர் அறிய சாதி மறுப்புத் திருமணங்கள் நடப்பது சமூக சூழலில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற திருமணம் குறித்த சுவரொட்டிகளை ஒட்டுவதற்குகூட காவல் துறை அனுமதி மறுக்கிறது.
இன்றும் இதுபோன்ற திருமணங்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது. சாதிக்குள்ளேயே காதல் நிகழ வேண்டும். சாதி மாறி வரக் கூடாது என்ற நிலை இருந்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் திட்டமிட்ட ஒன்று. பல ஆண்டாக திட்டமிட்டு வன்முறையை உருவாக்குகின்றனர்.
மதத்தின் பெயரால் வன்முறை நடக்க வாய்ப்புள்ளது. இந்துக்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தி பிரச்சினையைத் தூண்டிவிட முயற்சிக்கின்றனர். அது நடக்காததால் சாதிப் பெருமை பேசுகின்றனர். இதை ஒரு வேலைத் திட்டமாகவே இந்து சனாதன அமைப்புகள் செய்கின்றன.
சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் வேர்பிடிக்க அதிமுக உள்ளிட்ட கட்சிகளை பிடித்துள்ளன. வலதுசாரிகளை வீழ்த்த வேண்டும். இடதுசாரி அரசியல் வெற்றி பெற வேண்டும். வலதுசாரி அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை என, அவர்கள் பின்னங்கால்கள் பிடரியில் பட ஓடும்படி விரட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.