

மதுரை: மதுரையில் சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறப்பதற்காக அவரச கதியில் பணிகள் நடந்ததால், மைதான நுழைவு வாயிலுள்ள சாலை 3 நாட்களில் பெயர்ந்துள்ளது.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 14-வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் மதுரையில் நவ.28 முதல் டிச.10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மதுரையில் புதிய ஹாக்கி மைதானம், பார்வையாளர் அரங்கு ரூ.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர் அரங்கு கட்டுமானப் பணி மே மாதத்தில் தொடங்கினாலும், முதலில் இழுபறியாகவே மந்தகதியில் நடந்தது.
புதிய அரங்கு, மைதானத்தை நவ. 22-ல் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்க திட்டமிடப்பட்டது. பின்னர் அதற்காக கட்டுமானப் பணிகள், முகப்பு, தார்ச்சாலைகள் அமைக்கும் பணி அவசரகதியில் நடந்தன. இந்நிலையில் 3 நாட்களான நிலையில் ரேஸ்கோர்ஸ் சாலையிலிருந்து மைதானத்துக்கு செல்லும் நுழைவுவாயிலுள்ள சிமின்ட் சாலை பெயர்ந்துள்ளது. தரைத்தளம் சரியாக இறுகாமல், மழையால் அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் பார்வையாளர் அரங்கில் மாடிப்படிகள் சேதமடைந்துள்ளன. மைதானம் நுழைவு வாயிலில் இருந்து பேட்மிண்டன் அரங்கம் வரை அமைக்கப்பட்ட தார்ச்சாலையில் கழிவுநீர் குழாய் அமைத்த இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.
அதேபோல், 1,500 பார்வையாளர்கள் அமரும் வகையில் தற்காலிக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்ல மைதான வளாகத்தில் 6-வது கேட் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. சர்வதேச போட்டிக்கு அவசரகதியில் தரக்குறைவாக செய்யப்பட்ட பணிகளால் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு ஆர்வலர்களிடையே புகார் எழுந்துள்ளது.